19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கான ஆசிய கோப்பை வங்கதேசத்தில் நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், இலங்கை, ஹாங்காங், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 8 அணிகளும் கலந்துகொண்டு ஆடிவருகின்றன.

இதில் ஏ பிரிவில் இந்தியா, ஆஃப்கானிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும் பி பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. 

இந்த தொடரில் லீக் சுற்றில் நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரண்டு அணிகளையும் வீழ்த்திய இந்திய அணி, இன்று ஆஃப்கானிஸ்தானை எதிர்கொண்டு ஆடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

இந்திய அணியின் தொடக்க வீரர் அனுஜ் ராவட் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே அவுட்டானார். எனினும் மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி 92 ரன்களை குவித்தார். ஆயுஷ் பதோனி 65 ரன்களை குவித்தார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் வெளியேறினர். ஜெய்ஸ்வால் மற்றும் பதோனி ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 45.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

222 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரியாஸ் ஹசன் 47 ரன்களும் ரஹ்மனுல்லா 37 ரன்களும் எடுத்தனர். இவர்களுக்கு அடுத்து களமிறங்கிய வேறு எந்த வீரரும் சோபிக்காமல் சொற்ப ரன்களில் வெளியேறியதால் அந்த அணி 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானதை அடுத்து இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.