India defeated Sri Lanka in the second match Won the series ...
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று மூன்று ஆட்டங்களைக் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 260 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இலங்கை 17.2 ஓவர்களில் 172 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து பேட் செய்த இந்திய அணியில் ரோஹித் சர்மா -லோகேஷ் ராகுல் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது.
இதில் கேப்டன் ரோஹித் தொடக்கம் முதலே அதிரடியாக ஆட, மறுமுனையில் ராகுல் நிதானமாக ஓட்டங்கள் சேகரித்ததால் இந்தியாவின் ஸ்கோர் உயர்ந்தது.
இந்த நிலையில், 23 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் அரை சதம் எட்டினார் ரோஹித். இருவரின் அதிரடி ஆட்டத்தால் 8.4 ஓவர்களில் 100 ஓட்டங்களை அடைந்தது இந்தியா.
இலங்கையின் பந்துவீச்சை ரோஹித் - ராகுல் கூட்டணி நாலாபுறமும் பவுண்டரி, சிக்ஸர்களாக சிதறடித்தது. அசத்தலாக ஆடிய ரோஹித் 35 பந்துகளில் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் சதமடித்தார். இவ்வாறாக இந்தியா 150 ஓட்டங்களை எட்டிய நிலையில், லோகேஷ் ராகுல் 35 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் அரை சதமடித்தார்.
இந்த நிலையில் 12.4-ஆவது ஓவரில் ரோஹித் - ராகுல் கூட்டணி பிரிந்தது. சமீரா வீசிய அந்த ஓவரில் ரோஹித் ஆட்டமிழந்தார். 43 பந்துகளுக்கு 12 பவுண்டரிகள், 10 சிக்ஸர்களை சிதறடித்திருந்த அவர், 118 ஒட்டங்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் தனஞ்ஜெயாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்-ராகுல் ஜோடி 185 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் வந்த தோனி நிலையான ஆட்டத்தை கடைபிடிக்க, 18-வது ஓவரில் நுவான் பிரதீப் பந்துவீச்சில் விக்கெட்கள் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ராகுல். அவர் 49 பந்துகளில் 5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 89 ஓட்டங்கள் எடுத்தார்.
அதனைத் தொடர்ந்து வந்த ஹார்திக் பாண்டியா 3 பந்துகளை எதிர்கொண்டு தலா ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸரை பறக்கவிட்டு 10 ஓட்டங்களில் அவுட்டானார். அவர் நுவான் பிரதீப் பந்துவீச்சில் சமரவிக்ரமாவிடம் கேட்ச் கொடுத்தார்.
அடுத்து வந்த ஷ்ரேயஸ் ஐயர் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். கடைசி விக்கெட்டாக தோனி 21 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 28 ஓட்டங்கள் எடுத்து திசர பெரேரா பந்துவீச்சில் போல்டானார்.
இப்படி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்கள் எடுத்து இந்தியா. மணீஷ் பாண்டே 1 ஓட்டம், தினேஷ் கார்த்திக் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கை தரப்பில் நுவான் பிரதீப், திசர பெரேரா தலா 2 விக்கெட்டுகளும், சமீரா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து 261 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடிய இலங்கை அணி 17.2 ஓவர்களில் 172 ஓட்டங்களுக்கு வீழ்ந்தது. அந்த அணியில் குசல் பெரேரா மட்டும் அதிகபட்சமாக 77 ஓட்டங்கள் எடுத்தார்.
உபுல் தரங்கா 47 ஓட்டங்கள், நிரோஷன் டிக்வெல்லா 25 ஓட்டங்ளுக்கு ஆட்டமிழந்தனர். சமரவிக்ரமா, சதுரங்கா, அகிலா தனஞ்ஜெயா, சமீரா ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற, திசர பெரேரா, குணரத்னே டக் அவுட் ஆகினர்.
இந்திய தரப்பில் யுவேந்திர சாஹல் 4, குல்தீப் யாதவ் 3, உனத்கட், ஹார்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த ஆட்டத்தில் வெற்றிப் பெற்றதன்மூலம் மூன்று ஆட்டங்களைக் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது இந்தியா.
