இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா.

இலங்கை – இந்தியா இடையே நடைப்பெற்ற போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 158 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணியில் புஜாரா 133 ஓட்டங்கள், ரஹானே 132 ஓட்டங்கள், ஜடேஜா ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்கள் எடுத்திருந்தனர்.

இலங்கைத் தரப்பில் ரங்கனா ஹெராத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 49.4 ஓவர்களில் 183 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இந்தியத் தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், முகமது சமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸில் 439 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை அணி "பாலோ-ஆன்' பெற்றது. தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணியில் குஷல் மென்டிஸ் 110 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர், 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 60 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 209 ஓட்டங்கள் எடுத்திருந்தது. கருணாரத்னே 200 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 92 ஓட்டங்கள், புஷ்பகுமாரா 2 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.

4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் கருணாரத்னே 95 ஓட்டங்களில் இருந்தபோது ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் கொடுத்த கேட்ச்சை ராகுல் கோட்டைவிட்டார். இதனால் வாழ்வு பெற்ற கருணாரத்னே 224 பந்துகளில் சதமடித்தார்.

இலங்கை அணி 238 ஓட்டங்களை எட்டியபோது அஸ்வின் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார் புஷ்பகுமாரா. தடுப்பாட்டம் ஆடிய அவர் 58 பந்துகளில் 16 ஓட்டங்கள் எடுத்தார்.

இதையடுத்து களம்புகுந்த கேப்டன் தினேஷ் சன்டிமல் 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் ஆனார். பிறகு கருணாரத்னேவுடன் இணைந்தார் மேத்யூஸ். இந்த ஜோடி 69 ஓட்டங்கள் குவித்தது.

இலங்கை அணி 95.4 ஓவர்களில் 310 ஓட்டங்களை எடுத்திருந்தபோது கருணாரத்னே 307 பந்துகளைச் சந்தித்த கருணாரத்னே 16 பவுண்டரிகளுடன் 141 ஓட்டங்கள் குவித்து ஜடேஜா பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் ஆனார்.

சரிவுக்குள்ளான இலங்கை: இதன்பிறகு இலங்கையின் சரிவு தவிர்க்க முடியாததானது. மேத்யூஸ் 36 ஓட்டங்கள், தில்ருவான் பெரேரா 4 ஓட்டங்கள், டி சில்வா 17 ஓட்டங்கள், டிக்வெல்லா 31 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டான பிரதீப் 1 ஓட்டம் எடுத்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் இலங்கை அணி 116.5 ஓவர்களில் 386 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணி கடைசி 76 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.

இந்தியத் தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-0 என முன்னிலைப் பெற்றுள்ள இந்திய அணி தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 12-ஆம் தேதி பல்லகெலேவில் தொடங்குகிறது.