India defeated Japan by Mantheb Singhs hat-trick

26-ஆவது அஸ்லான் ஷா கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியில் இந்திய வீரர் மன்தீப் சிங் ஹாட்ரிக் கோலடித்து இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை பந்தாடியது.

26-ஆவது அஸ்லான் ஷா கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டி மலேசியாவின் ஈபோ நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவும், ஜப்பானும் எதிர்கொண்டன.

இந்த ஆட்டத்தின் 8-ஆவது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க, அதை ரூபிந்தர்பால் கோலாக்கினார். அதேபோன்று 9-ஆவது நிமிடத்தில் ஜப்பானுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை அந்த அணி கோட்டைவிட்டது. ஆனால், 10-ஆவது நிமிடத்தில் கஜூமா முராட்டா கோலடித்து ஸ்கோரை சமன் செய்து அசத்தியத்தினார்.

பிறகு 14-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இந்தியா கோட்டைவிட, 43 மற்றும் 45-ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து இரு கோல்களை அடித்தது ஜப்பான் முன்னேறியது.

அதே 45-ஆவது நிமிடத்தில் மன்தீப் சிங் கோலடித்து இந்தியாவின் கணக்கை அதிகரிக்க செய்தார். தொடர்ந்து கலக்கலாக ஆடிய மன்தீப் சிங் 51 மற்றும் 58-ஆவது நிமிடங்களில் கோலடிக்க, இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.

இதுவரை நான்கு ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய அணி, இரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளதன் மூலம் 7 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இதனால், இறுதிச் சுற்று வாய்ப்பை பெற்றுள்ளது இந்தியா.