India defeated Australia and seized the series ...
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று அசத்தியது.
ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நேற்று பகலிரவாக நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 242 ஓட்டங்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய இந்தியா, 42.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 243 ஓட்டங்கள் எடுத்து தொடரை வென்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ததில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 53 ஓட்டங்கள் எடுத்து அக்ஸர் படேல் பந்துவீச்சில் மணீஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவருடன் வந்த ஆரோன் ஃபிஞ்ச் 6 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், ஹார்திக் பாண்டியா பந்துவீச்சில் பூம்ராவிடம் கேட்ச் கொடுத்தார்.
பின்னர் வந்த கேப்டன் ஸ்மித் 16 ஓட்டங்களில் வெளியேற, தொடர்ந்துவந்த ஹேண்ட்ஸ்காம்ப் 13 ஓட்டங்களில் வெளியேறினார்.
டிராவிஸ் ஹெட் 42 ஓட்டங்களிலும், ஸ்டோனிஸ் 46 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த மேத்யு வேட் 20 ஓட்டங்களில் வெளியேறினார்.
கடைசி ஓவரின் 5-வது பந்தில் ஃபாக்னரை 12 ஓட்டங்களில் வெளியேற்றிய புவனேஸ்வர் குமார், கடைசி பந்தில் கோல்டர் நீலை டக் ஔட் ஆக்கினார். இப்படி ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 242 ஓட்டங்கள் எடுத்தது. பேட் கம்மின்ஸ் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியத் தரப்பில், அக்ஸர் படேல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், ஜஸ்பிரித் பூம்ரா 2 விக்கெட்டுகளும், புவனேஸ்வர், பாண்டியா, கேதார் ஜாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து ஆடத் தொடங்கிய இந்திய அணியில் ரோஹித் - ரஹானே கூட்டணி அருமையான தொடக்கத்தை ஏற்படுத்தி முதல் விக்கெட்டுக்கு 113 பந்துகளில் 100 ஓட்டங்கள் சேகரித்தது. இந்த ஜோடியை கோல்டர் நீல் பிரித்தார். 7 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் எடுத்து ரஹானே ஆட்டமிழந்தார்.
ரோஹித் அபாரமாக ஆட, அடுத்து களத்துக்கு கோலி வந்த நிலையில், சதம் கடந்து ஆடிக் கொண்டிருந்த ரோஹித் 109 பந்துகளில் 11 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 125 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதையடுத்து கேதார் ஜாதவ் களத்துக்கு வர, மறுமுனையில் 39 ஓட்டங்கள் எடுத்திருந்த கோலி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இறுதியாக கேதார் - மணீஷ் பாண்டே ஜோடி இந்திய அணியை வெற்றிக்கு பெற்றுத் தந்தது.
கேதார் ஜாதவ் 5 ஓட்டங்கள், மணீஷ் பாண்டே 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆஸ்திரேலிய தரப்பில் ஆடம் ஸம்பா 2, கோல்டர் நீல் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்தியாவின் ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதையும், ஹார்திக் பாண்டியா தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
