india defeat Sri Lanka

இலங்கைக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று மூன்று ஆட்டங்கள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது இந்தியா.

ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் நேற்று இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 180 ஓட்டங்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய இலங்கை 16 ஓவர்களில் 87 ஓட்டங்களுக்கு சுருண்டு தோல்வியைத் தழுவியது.

டாஸ் வென்ற இலங்கை பந்துவீச, முதலில் பேட் செய்த இந்தியாவில் ரோஹித் சர்மா - லோகேஷ் ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க இருவருமே நிதானமாக ஆடினர். ரோஹித் சர்மா 2 பவுண்டரிகள் உள்பட 17 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் மேத்யூஸ் பந்துவீச்சில் சமீராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து ஷ்ரேயஸ் ஐயர் களம் புகுந்த நிலையில், மேத்யூஸ் வீசிய 6-வது ஓவரின் முதல் பந்து லோகேஷ் ராகுலின் லெக் பேடில் பட, அதற்கு எல்பிடபிள்யூ கொடுத்தார் நடுவர். எனினும், டிஆர்எஸ் (நடுவர் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு) முறையின் மூலம் ராகுல் ஆட்டமிழக்கவில்லை என்று தெரிந்தது.

இதனையடுத்து இலங்கை பந்துவீச்சை சிதறடிக்கத் தொடங்கினார் ராகுல். அவர் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் அரை சதத்தை எட்டினார்.

மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த ஷ்ரேயஸ் ஐயர் இந்தியா 100 ஓட்டங்களை கடந்த நிலையில் ஆட்டமிழந்தார். 20 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 24 ஓட்டங்கள் எடுத்த அவர், நுவான் பிரதீப் வீசிய 12-வது ஓவரில் விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லாவிடம் கேட்ச் ஆனார்.

பின்னர் தோனி களம் கண்ட நிலையில், 48 பந்துகளுக்கு 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 61 ஓட்டங்களுக்கு வெளியேறினார் லோகேஷ் ராகுல். அவர் திசர பெரேரா பந்துவீச்சில் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த மணீஷ் பாண்டே, தோனியுடன் இணைய, அந்த இணை அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை விறு விறுவென உயர்த்தியது. இவ்வாறாக 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 180 ஓட்டங்கள் எடுத்தது இந்தியா.

தோனி 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 39 ஓட்டங்களுடனும், மணீஷ் பாண்டே 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 32 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இலங்கை தரப்பில் மேத்யூஸ், திசர பெரேரா, விஷ்வா ஃபெர்னான்டோ தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதனையடுத்து 181 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய இலங்கை அணியில் உபுல் தரங்கா மட்டும் அதிகபட்சமாக 23 ஓட்டங்கள் எடுத்தார்.

டிக்வெல்லா 13 ஓட்டங்கள் , குசல் பெரேரா 19 ஓட்டங்கள் , சமீரா 12 ஓட்டங்களில் வெளியேறினர். எஞ்சிய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 87 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை.

இந்திய தரப்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்திய யுவேந்திர சாஹல் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த டி-20 ஆட்டத்தில் வெற்றிப் பெற்றதையடுத்து மூன்று ஆட்டங்கள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது இந்தியா.