ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸை முடிப்பதற்கு முந்தைய சில ஓவர்களில் ரிஷப் பண்ட்டும் ஜடேஜாவும் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்துவிட்டனர். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 622 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் பேட்டிங் அபாரமாக இருந்தது. ராகுல் வழக்கம்போல ஏமாற்றினாலும் மயன்க் அகர்வாலும் புஜாராவும் சிறப்பாக ஆடினர். 77 ரன்களில் ஆட்டமிழந்த மயன்க், சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதையடுத்து கோலி 23 ரன்களிலும் ரஹானே 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். எனினும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய புஜாரா, டெஸ்ட் அரங்கில் தனது 18வது சதத்தையும் இந்த தொடரில் 3வது சதத்தையும் பூர்த்தி செய்தார். அவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய ஹனுமா விஹாரி இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விஹாரி ஆட்டமிழந்தார். விஹாரி 42 ரன்கள் எடுத்தார். 

சதத்திற்கு பிறகும் சிறப்பாக ஆடி இரட்டை சதத்தை நோக்கி பயணித்த புஜாரா, 193 ரன்களில் ஆட்டமிழந்து இரட்டை சதத்தை தவறவிட்டார். புஜாரா ஆட்டமிழந்த பிறகு, அவர் விட்டுச்சென்ற பணியை செவ்வனே செய்தார் ரிஷப் பண்ட். ரிஷப் பண்ட்டுக்கு ஜடேஜா நல்ல ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். ரிஷப் பண்ட் தனது 2வது சர்வதேச சதத்தை பூர்த்தி செய்தார். அதன்பிறகு ஆஸ்திரேலிய பவுலிங்கை அடித்து நொறுக்கினார். ஜடேஜாவும் அரைசதம் கடந்த பிறகு பவுண்டரிகளாக விளாசினார். 

இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தின் மூன்றாவது செசனில் ரிஷப்பும் ஜடேஜாவும் ஆஸ்திரேலிய பவுலிங்கின் மீது ஆதிக்கம் செலுத்தி பவுண்டரிகளாக அடித்து ஆடினர். இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 204 ரன்களை விரைவாக குவித்தது. அபாரமாக ஆடிய ரிஷப் பண்ட் 150 ரன்களை கடந்தார். சதத்தை நோக்கி சென்ற ஜடேஜா, 81 ரன்களில் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார் கேப்டன் கோலி. 

7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்களை குவித்த நிலையில், முதல் இன்னிங்ஸை இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதுதான் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி குவித்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். ரிஷப் பண்ட் 159 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.