India Britains hockey tournament starts today in the city

மலேசியாவின் இப்போ நகரில், இன்று தொடங்கும் 26-ஆவது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா - பிரிட்டன் அணிகள் மோதுகின்றன.

தற்போது உலகின் 6-ஆம் நிலை அணியாக இருக்கும் இந்தியா, ஜூன் மாதம் லண்டனில் நடைபெறவுள்ள உலக லீக் அரையிறுதிப் போட்டிக்கு தயாராகும் வகையில் சுல்தான் அஸ்லான் ஷா போட்டியை எதிர்கொள்கிறது.

இதனிடையே, ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா தனது பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் பட்சத்தில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதிபெற்றுவிடும்.

இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் ரோலண்ட் ஓல்ட்மன்ஸ் கூறியதாவது:

ஜூனியர் அணியில் இருந்து சீனியர் அணிக்கு வந்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்மன்பிரீத் சிங், தற்போது அணியில் புதிதாக இணைந்துள்ள ஜூனியர் வீரர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருப்பார்.

அதேவேளையில், அணியில் ஏற்கெனவே அனுபவம் மிகுந்த பல வீரர்கள் இருப்பதால், இளம் வீரர்கள் அதீத நெருக்கடிக்கு ஆளாக்கப்பட மாட்டார்கள்” என்று அவர் கூறினார்.

பிரிட்டனைத் தொடர்ந்து, 30-ஆம் தேதி நியூஸிலாந்துடனும், மே 2-ஆம் தேதி ஆஸ்திரேலியா, 3-ஆம் தேதி ஜப்பான், 5-ஆம் தேதி மலேசியா அணிகளுடன் மோதுகிறது இந்திய அணி.

கடந்த சீசனில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய இந்தியா, 9 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவிடம் அதில் தோல்வி கண்டது.