2030-ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் உரிமையை அகமதாபாத் பெற்றுள்ளது. 2010-க்குப் பிறகு இந்தியாவில் நடக்கும் மெகா விளையாட்டுப் போட்டியாக இருக்கும். இது 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு முன்னோட்டமாக அமையும்.
இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, 2030-ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை (Commonwealth Games - CWG) நடத்தும் உரிமையை குஜராத் மாநிலம் அகமதாபாத் பெற்றுள்ளது. தில்லியில் 2010-ல் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு, மெகா விளையாட்டுப் போட்டி ஒன்று இந்தியாவில் நடப்பது இதுவே முதல் முறையாகும்.
ஸ்காட்லாந்தில் இன்று நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு (Commonwealth Sport - CS) அமைப்பின் பொதுச் சபைக் கூட்டத்தில், 2030 போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டது.
2036 ஒலிம்பிக்கின் முன்னோட்டம்
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை அகமதாபாத் நடத்துவது, 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் இந்தியாவின் லட்சியத்தையும், உறுதிப்பாட்டையும் உலகிற்கு நிரூபிக்கும் ஒரு முக்கியப் படியாகும். 2036 ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏலத்திலும் இந்தியா, அகமதாபாத்தை மையமாகக் கொண்டு களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காமன்வெல்த் விளையாட்டு மதிப்பீட்டுக் குழுவானது, தொழில்நுட்ப விநியோகம், வீரர்களின் அனுபவம், உள்கட்டமைப்பு, நிர்வாகம் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு மதிப்புகளுடன் இணங்குதல் போன்ற பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் வேட்பாளர் நகரங்களை விரிவாக மதிப்பிட்ட பின்னரே அகமதாபாத்தை பரிந்துரைத்தது.
நூற்றாண்டை எட்டும் காமன்வெல்த் போட்டிகள்
காமன்வெல்த் விளையாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் டொனால்ட் ரூகரே இதுகுறித்து பேசுகையில், "இது காமன்வெல்த் விளையாட்டுக்கு ஒரு புதிய பொற்காலத்தின் தொடக்கமாகும். 2026 கிளாஸ்கோ போட்டிகளுக்குப் பிறகு, காமன்வெல்த் விளையாட்டு அமைப்பின் நூற்றாண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில், 2030-ல் அகமதாபாத்தை நோக்கி நாம் செல்கிறோம்" என்று கூறினார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) தலைவரும், முன்னாள் தடகள வீராங்கனையுமான பி.டி. உஷா பேசுகையில், "காமன்வெல்த் விளையாட்டு அமைப்பு எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையால் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். 2030 காமன்வெல்த் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதுடன், அடுத்த நூற்றாண்டுக்கான அடித்தளத்தையும் அமைக்கும்" என்று தெரிவித்தார்.
போட்டிகளின் எண்ணிக்கை
அகமதாபாத்தில் நடக்கும் 2030 காமன்வெல்த் போட்டிகளில் 15 முதல் 17 விளையாட்டுகள் இடம்பெறும் என்றும் காமன்வெல்த் விளையாட்டு அமைப்பு உறுதி செய்துள்ளது.
1930-ல் கனடாவின் ஹாமில்டனில் முதல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. 2030-ல் அகமதாபாத்தில் நடக்கும் நிகழ்வு நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 'அடுத்த நூற்றாண்டுக்கான விளையாட்டுகள்' ('The Games for the Next Century') என்று பெயரிடப்பட்டுள்ளது.
நைஜீரியாவின் அபுஜா நகரும் 2030 போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்திருந்தது. ஆனால், காமன்வெல்த் நிர்வாக வாரியம் அகமதாபாத்தை பரிந்துரைத்ததுடன், நைஜீரியாவின் விருப்பம் 2034 போட்டிகளுக்குப் பரிசீலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.


