இங்கிலாந்து லயன்ஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, இந்தியா ஏ அணியுடன் அதிகாரப்பூர்வமற்ற 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இந்த தொடர் முழுவதுமே கேரளாவில் நடக்கிறது. ஒருநாள் போட்டிகள் திருவனந்தபுரத்திலும் டெஸ்ட் போட்டிகள் வயநாட்டிலும் நடக்கின்றன.

முதலில் ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் 138 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இதையடுத்து இன்று மூன்றாவது போட்டி நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் யாருமே சோபிக்கவில்லை. ரஹானே இன்னிங்ஸின் முதல் பந்திலேயே ஆட்டமிழக்க, இடைக்கால தடைக்கு பிறகு மீண்டும் ஆடவந்த ராகுல் வெறும் 13 ரன்களில் நடையை கட்டினார். ஹனுமா விஹாரி(16 ரன்கள்), ஷ்ரேயாஸ் ஐயர்(13 ரன்கள்) என வரிசையாக சொற்ப ரன்களில் வெளியேறினார். இஷான் கிஷான் ஓரளவிற்கு நிலைத்து ஆடி 30 ரன்களையும் குருணல் பாண்டியா 21 ரன்களையும் அடித்தனர். 

எனினும் பின்வரிசை வீரரும் பவுலருமான தீபக் சாஹர் ஓரளவிற்கு பேட்டிங் ஆடக்கூடியவர் என்பதால் இக்கட்டான சூழலில் 39 ரன்கள் அடித்து இந்திய அணியின் ஸ்கோரை ஓரளவிற்கு உயர்த்தினார். எனினும் 47.1 ஓவரில் வெறும் 172 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. 

173 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பேட்டிங் வரிசையை குருணல் பாண்டியாவும் அக்ஸர் படேலும் தங்களது சுழலில் சுருட்டினர். இங்கிலாந்து லயன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் டேவிஸை ரன் ஏதும் எடுக்காமலும் வில் ஜாக்ஸை 1 ரன்னிலும் வெளியேற்றினார் அக்ஸர் படேல். அந்த அணியின் கேப்டன் சாம் பில்லிங்ஸை தீபக் சாஹர் 1 ரன்னில் அனுப்பினார். 

அதன்பிறகு மளமளவென விக்கெட்டுகள் சரிய, மறுமுனையில் பென் டக்கெட் மட்டும் களத்தில் நிலைத்து ஆடிவந்தார். ஆனால் அவரை 39 ரன்களில் வீழ்த்தி பிரேக் கொடுத்து, இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார் குருணல் பாண்டியா. அதன்பிறகு டேனி பிரிக்ஸ், மேத்யூ கார்ட்டர் ஆகியோரின் விக்கெட்டுகளையும் குருணல் பாண்டியா வீழ்த்தினார். 

இதையடுத்து அந்த அணி 31 ஓவரில் வெறும் 112 ரன்களுக்கே ஆல் அவுட்டானதால் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக குருணல் பாண்டியா 4 விக்கெட்டுகளையும் அக்ஸர் படேல் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். குருணல் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.