இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

இங்கிலாந்து லயன்ஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, இந்தியா ஏ அணியுடன் அதிகாரப்பூர்வமற்ற 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இந்த தொடர் முழுவதுமே கேரளாவில் நடக்கிறது. ஒருநாள் போட்டிகள் திருவனந்தபுரத்திலும் டெஸ்ட் போட்டிகள் வயநாட்டிலும் நடக்கின்றன.

நேற்று நடந்த முதல் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணியின் கேப்டன் சாம் பில்லிங்ஸ் அபாரமாக ஆடி சதமடித்தார். 104 பந்துகளில் 108 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சாம் பில்லிங்ஸின் சதம் மற்றும் தொடக்க வீரர் அலெக்ஸ் டேவிஸின் அரைசதம் ஆகியவற்றால் அந்த அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்களை குவித்தது. 

286 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஏ அணியின் கேப்டன் மற்றும் தொடக்க வீரரான ரஹானே பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். மற்றொரு தொடக்க வீரரான அன்மோல்பிரீத் சிங் 33 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ரஹானே - அன்மோல்பிரீத் ஜோடி 66 ரன்களை சேர்த்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயரும் சிறப்பாக ஆடினார். 45 ரன்கள் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர், அரைசத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். 

அரைசதம் அடித்த ரஹானேவும் 59 ரன்களில் வெளியேற, அதன்பிறகு போட்டியை தன் கையில் எடுத்துக்கொண்ட இளம் வீரர் இஷான் கிஷான், அபாரமாக ஆடி அரைசதம் கடந்து, கடைசிவரை ஆட்டமிழக்காமல் இந்தியா ஏ அணியை வெற்றி பெற செய்தார். குருணல் பாண்டியா(29 ரன்கள்), அக்ஸர் படேல்(18 ரன்கள்) ஆகியோரும் சிறு சிறு பங்களிப்பை அளித்தனர். இறுதிவரை உறுதியுடன் ஆடி இஷான் கிஷான் வெற்றியை தேடித்தந்தார். இந்திய அணி 50 ஓவரின் முதல் பந்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் அடித்த இஷான் கிஷான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.