இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் புனேவில் நாளை தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. அதனால் இந்த ஆட்டம் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ஷிகர் தவனும், கே.எல்.ராகுலும் தொடக்க வீரராக களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காயத்திலிருந்து மீண்டுள்ள தவன், அணியில் தனது இடத்தைத் தக்கவைக்க, இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடிய ராகுல், இந்த ஆட்டத்திலும் அசத்துவார் என நம்பலாம்.

மிடில் ஆர்டரில் கேப்டன் கோலி, ரஹானே ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். ரஞ்சி தொடரில் சிறப்பாக ஆடியிருக்கும் யுவராஜ் சிங் இந்த ஆட்டத்தில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோனி, சமீபகாலமாக 4-ஆவது வீரராக களமிறங்கினார். ஆனால் இந்த ஆட்டத்தில் அவருக்கு 4-ஆவது வீரராக களமிறங்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. வாய்ப்பு கிடைக்காவிட்டால் 6-ஆவது வீரராகவே களமிறங்குவார்.

ஆல்ரவுண்டர் இடத்தில் ஹார்திக் பாண்டியா இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் உமேஷ் யாதவுடன் புவனேஸ்வர் குமார் அல்லது ஜஸ்பிரித் பூம்ரா இடம்பெறலாம். சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா கூட்டணி பலம் சேர்க்கிறது.

டெஸ்ட் தொடரில் இந்தியாவிடம் படுதோல்வி கண்ட இங்கிலாந்து அணி, ஒரு நாள் தொடரில் வெல்ல வேண்டிய நெருக்கடியில் களமிறங்குகிறது.

இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடிய அந்த அணி, ஒரு வெற்றி, ஒரு தோல்வியைப் பதிவு செய்துள்ளது.

அந்த அணி ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், ஜோஷ் பட்லர் என வலுவான பேட்ஸ்மேன்களைக் கொண்டிருந்தாலும், அதன் பந்துவீச்சு எந்தளவுக்கு இருக்கும் என்று பார்க்கலாம்.

இதுவரை இவ்விரு அணிகளும் 93 ஒரு நாள் ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் இந்தியா 50 வெற்றிகளையும், இங்கிலாந்து 38 வெற்றிகளையும் பெற்றுள்ளன. இரு ஆட்டங்கள் "டை'யில் முடிந்துள்ளன. 3 ஆட்டங்களில் முடிவு எட்டப்படவில்லை.