India - China Women Hockey Team Confrontation Tomorrow

மகளிர் ஆசிய கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா - சீனா அணிகள் நாளை ஆவேசத்துடன் மோதுகின்றன.

மகளிர் ஆசிய கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியின் அரையிறுதி நேற்று நடைபெற்றது. இதில், இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சாம்பியனான ஜப்பானை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் குர்ஜித் கெளர் இரண்டு கோல்களும், நவ்ஜோத் கெளர், லால்ரெம்சியாமி ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டனர்.

ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே இந்தியாவுக்கு அடுத்தடுத்து பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. அவ்வாறு 7-வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை அருமையான கோலாக மாற்றினார் டிராக் ஃப்ளிக்கர் குர்ஜித் கெளர். இதனால் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றது.

அடுத்த இரண்டு நிமிடத்திலேயே கோல் எண்ணிக்கையை இரண்டாக அதிகரித்தார் அணியின் நவ்ஜோத் கெளர். அவர், ஒன்பதாவது நிமிடத்தில் முன்கள வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் உதவியுடன் அற்புதமான ஃபீல்டு கோல் அடித்தார். அந்த நிமிடத்திலேயே இந்தியாவுக்கு மீண்டும் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதை கோலாக மாற்றிய குர்ஜித் கெளர். இப்படி இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்றது.

மறுமுனையில் தடுப்பாட்டத்தில் தடுமாறிவந்த ஜப்பான் அணி, தாக்குதல் ஆட்டத்தை தொடங்கியது. அதன் பலனாக 17-வது நிமிடத்தில் அந்த அணியின் ஷிஹோ ட்சுஜி ஒரு கோல் அடித்து ஜப்பானின் கணக்கை தொடக்கி வைத்தார்.

இந்தியாவின் தடுப்பாட்டத்துக்கான அடுத்த சோதனையாக, 28-வது நிமிடத்தில் ஜப்பான் வீராங்கனை யுய் இஷிபாஷி 'ஃபீல்டு' கோல் ஒன்றை அடித்தார். எனினும், முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இந்தியா 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் மீண்டும் இந்தியா 38-வது நிமிடத்தில் லால்ரெம்சியாமி ஃபீல்டு கோல் அடித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பான் அணிக்கு தொடர்ச்சியாக பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தபோதிலும், இந்தியாவின் சவிதா அதை அரண்போல் தடுத்தார். இறுதியில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்த வெற்றியின்மூலம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்தியா நாளை சீன அணியுடன் மோத இருக்கிறது. இரண்டு அணிகளில் வெற்றிப் பெறபோவது யார் என்பது நாளை தெரியும்.