அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால், ரோஜர் ஃபெடரர், கரோலினா பிளிஸ்கோவா, மேடிசன் கீஸ் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றில் உலகின் முதல் நிலை வீரர் ஸ்பெயினின் ரஃபேல் நடால், உக்ரைனின் அலெக்ஸாண்டர் டோல்கோபோலோவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் நடால் 6-2, 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

நடால் தனது காலிறுதியில் ரஷியாவின் ஆன்ட்ரே ருபலேவை சந்திக்கிறார்.

மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஜெர்மனியின் பிலிப் கோல்ஷ்ரைபருடன் எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் 6-4, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் ஃபெடரர் வெற்றிப் பெற்றார்.

ஃபெடரர் தனது காலிறுதியில், ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவை சந்திக்கிறார்.

அதேபோன்று மகளிர் ஒற்றையர் பிரிவில், உலகின் முதல் நிலை வீராங்கனையான செக். குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தனது 4-வது சுற்றில் அமெரிக்காவின் ஜெனிஃபர் பிராடியை எதிர்கொண்டார்.

இதில், 6-1, 6-0 என்ற செட் கணக்கில் ஜெனிஃபர் பிராடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் கரோலினா.

கரோலினா காலிறுதியில் மற்றொரு அமெரிக்கரான கோகோ வான்டெவெக்கை சந்திக்கிறார்.

அதேபோல், அமெரிக்காவின் மேடிசன் கீஸ், உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவுடன் மோதி 7-6(2), 1-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

மேடிசன் கீஸ் காலிறுதியில் எஸ்டோனியாவின் கையா கானேபியை சந்திக்கிறார்.