பாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்நாளில் ஆஸ்திரேலியா 88 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 365 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

சிட்னியில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்யத் தொடங்கியுள்ள ஆஸ்திரேலிய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக மாட் ரென்ஷா, டேவிட் வார்னர் களமிறங்கினர்.

வலிமையான இந்த ஜோடி, மதிய உணவு இடைவேளையையும் தாண்டி நிலைத்து பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை சோதித்தது.

இதற்குள்ளாக வார்னர் 78 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் சதமடித்தார்.

இந்த இணையை பாகிஸ்தான் பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் பிரித்தார்.

வார்னர் 95 பந்துகளில் 113 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் வஹாபின் பந்துவீச்சில் சர்ஃப்ராஸ் அகமதிடம் கேட்ச் ஆனார்.

பின்னர் வந்த கவாஜா 13, ஸ்டீவன் ஸ்மித் 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து, ஹேண்ட்ஸ்கோம்ப் களத்துக்கு வந்தார்.

மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த ரென்ஷா, 201 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் சதம் கடந்தார்.

முதல்நாள் ஆட்டநேர முடிவில் 88 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 365 ஓட்டங்கள் எடுத்தது ஆஸ்திரேலியா.

ரென்ஷா 167, ஹேண்ட்ஸ்கோம்ப் 40 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.

பாகிஸ்தான் தரப்பில் வஹாப் ரியாஸ் 2, யாசிர் ஷா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.