கிரிக்கெட் விளையாட்டில் நடுவரின் தீர்ப்பு சில வேளைகளில் நமக்கு ஆதரவாகவும், சில வேளைகளில் எதிரணிக்கு ஆதரவாகவும் இருக்கும் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பூம்ரா கூறினார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் இரண்டாவதாக பேட் செய்த இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ஓட்டங்கள் தேவை என்ற நிலை இருந்தது. அந்த ஓவரை பூம்ரா வீச, முதல் பந்திலேயே ஜோ ரூட் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்ததாக நடுவர் ஷம்சுதின் அறிவித்தார். ஆனால், பந்து பேட்டில் பட்டு ஜோ ரூட்டின் காலில் பட்டது "ரீப்ளே'வில் தெரிந்தது.
நடுவரின் அந்த தவறான தீர்ப்பு குறித்து அதிருப்தி தெரிவித்தார் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன்.
இந்நிலையில், இதுகுறித்து இந்திய பந்துவீச்சாளர் பூம்ரா நேற்று கூறியதாவது:
“நடுவர்கள் அளிக்கும் தீர்ப்பின் மீதே எப்போதும் நாம் கவனமாக இருக்கக் கூடாது. சில வேளைகளில் அந்தத் தீர்ப்பு நமக்கு ஆதரவாகவும், சில வேளைகளில் எதிரணிக்கு ஆதரவாகவும் இருக்கும். கிரிக்கெட்டில் அது இயல்பான ஒன்று என்பதால், தொடர்ந்து விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
டி20 உலகக் கோப்பை உள்பட, நெஹ்ராவுடன் சில போட்டிகளில் விளையாடியுள்ளேன். பந்துவீச்சைப் பொருத்த வரையில், அவர் போன்ற மூத்த வீரர்களின் வழிகாட்டுதல்கள் மதிப்பு மிக்க ஒன்று.
பெரிய மைதானங்களில் "பேக் ஆஃப் லெங்த்', மெதுவான பந்துவீச்சு போன்றவை விக்கெட் வீழ்ச்சிக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆனால், சிறிய மைதானங்களில் அதுவே ஓட்டங்களைக் கொடுத்துவிடும் என்று பூம்ரா கூறினார்.
