ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்றுடன் லீக் போட்டிகள் முடிகின்றன. பிளே ஆஃபிற்கு ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா ஆகிய அணிகள் தகுதி பெற்றுவிட்டன.

ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. டெல்லி அணி ஏற்கனவே பிளே ஆஃபிற்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து தொடரை விட்டு வெளியேறிவிட்டது. அதனால் அந்த அணிக்கு இழப்பு ஏதுமில்லை.

ஆனால், பிளே ஆஃபிற்குள் நுழைய மும்பை அணி இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டும். இந்த போட்டியில் வென்றால், மும்பை அணியும் 14 புள்ளிகளை பெறும். ஆனால் நெட் ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தானை பின்னுக்கு தள்ளி மும்பை அணி பிளே ஆஃபிற்குள் நுழைந்துவிடும்.

மும்பைக்கு முக்கியமான போட்டி இது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்த சீசனில் இதுவரை சரியாக ஆடாத மேக்ஸ்வெல்லை தொடக்க வீரராக டெல்லி அணி களமிறக்கியது.

மேக்ஸ்வெல்லும் பிரித்வி ஷாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பிரித்வி ஷா, 12 ரன்களில் அவுட்டானார். தொடக்க வீரராக களமிறக்கியபோதும், மேக்ஸ்வெல் சோபிக்கவில்லை. 22 ரன்களில் பும்ரா பவுலிங்கில் போல்டாகி வெளியேறினார்.