If you have finished the game it would have been a great surprise if you played the last time - Shreyas Iyer

கடைசி வரை களத்தில் நின்று ஆட்டத்தை முடித்திருந்தால் மிகப்பெரிய வியப்பை தந்திருக்கும் என்று டெல்லி அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் ஐயர் தெரிவித்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 50-ஆவது லீக் ஆட்டம் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை தோற்கடித்தது டெல்லி.

இந்த ஆட்டத்தில் ஷ்ரேயஸ் ஐயர் 57 பந்துகளில் 2 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 96 ஓட்டங்கள் குவித்து ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஷ்ரேயஸ் ஐயர் கூறியது:

“எனக்கு வியப்பாக இருக்கிறது. கடைசி வரை களத்தில் நின்று ஆட்டத்தை முடித்திருந்தால், அது மிகப்பெரிய வியப்பை தந்திருக்கும். ஆனால் என்னால் அதை செய்ய முடியாமல் போனது.

இந்த ஐபிஎல் சீசன் எனக்கு மோசமானதாக அமைந்ததாக நினைக்கவில்லை. வழக்கமாக தொடக்க வீரராக களமிறங்குவேன். ஆனால் இந்த சீசனில் 4-ஆவது வீரராக களமிறங்குவதால் எனக்கு பொறுப்பு இருக்கிறது. அதற்கான உதாரணம்தான் இந்த ஆட்டம்.

தொடர்ந்து தொடக்க வீரராக விளையாடிவிட்டு, 4-ஆவது இடத்தில் களமிறங்குவது கடினமானதுதான். எனினும் தொழில்முறை வீரராக இருக்கும்போது, எந்த வரிசையிலும் களமிறங்கி பேட் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

எப்போதுமே பெரிய அளவிலான ஸ்கோரை குவிக்கும்போது நான் மகிழ்ச்சியடைவேன். அடுத்த இரு ஆட்டங்களிலும் பெரிய அளவில் ரன் குவிப்பேன் என நம்புகிறேன்” என்று கூறினார்.