ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், விளையாட்டு வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் சிறைத் தண்டனை வழங்கும் சட்டத்தை உருவாக்க மத்திய அரசு ஆலோசிக்கிறது என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்தார்.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் செய்தியாளர்களிடம் கூறியது:

“ஊக்கமருந்து பயன்பாட்டை குற்றச் செயலாக அறிவிக்கும் புதிய சட்டத்தின் மூலம், ஊக்கமருந்து பயன்படுத்திய விளையாட்டு வீரர்களுக்கு சிறை தண்டனை வழங்குவது தொடர்பாக விரிவாக கலந்தாலோசித்து வருகிறோம்.

சில வேளைகளில் விளையாட்டு வீரர்கள் தங்களை அறியாமலேயே, தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்திவிடுகின்றனர்.

பயிற்சியாளர்களின் அந்தத் தவறுக்கு விளையாட்டு வீரர்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். ஆனால், பயிற்சியாளர்கள் தப்பிவிடுகின்றனர்.

ஆகையால் பயிற்சியாளர்கள், மருத்துவர்கள் என இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட வேண்டும்.

எனவே, அதுதொடர்பான புதிய சட்டத்தை கொண்டுவருவது குறித்து சட்ட அமைச்சகம் உள்பட, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து வருகிறோம்” என்று விஜய் கோயல் கூறினார்.