இந்தாண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒட்டுமொத்த பரிசுத் தொகை ரூ.312 கோடி என்று பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி இயக்குநர் கை ஃபார்கெட் தெரிவித்துள்ளார். 

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியானது ஒரு சீசன் முழுவதுமாக 4 வார இறுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல் நவம்பர் மாத இறுதி வாரத்தில் மட்டும் அந்தப் போட்டியை நடத்துவதென திட்டமிட்டுள்ளதாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் கடந்த மாதம் அறிவித்திருந்தது.

அதன்படி, தொழில்முறை டென்னிஸ் வீரர்களுக்கான சங்கம் (ஏடிபி), உலக அணிகள் கோப்பை போட்டியை மறு அறிமுகம் செய்வதற்கு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்தும் ரோலண்ட் கேரோஸ் அமைப்பின் இயக்குநர் கை ஃபர்கெட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

2018-ஆம் ஆண்டின் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி இயக்குநர் கை ஃபார்கெட் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், "இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வரும் மே 27 முதல் ஜூன் 10-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

2018-ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபனில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வெல்பவர்கள் தலா ரூ.17.62 கோடி பரிசுத் தொகையாக பெறவுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சாம்பியனுக்கான பரிசுத் தொகை ரூ.80 இலட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 2018-ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபனில் ஒட்டுமொத்த பரிசுத் தொகை சுமார் ரூ.312 கோடி. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் பரிசுத் தொகையானது சுமார் ரூ.24 கோடி உயர்த்தப்பட்டுள்ளது 

இதனிடையே, 2020 ஜனவரி மாதம் உலக அணிகள் கோப்பை டென்னிஸ் போட்டியை மீண்டும் நடத்த ஏடிபி முனைவதாக கூறப்படுகிறது. டேவிஸ் கோப்பை போட்டிக்குப் பிறகு 2 மாத இடைவெளியில் உடனே நடத்தப்படும் இந்த உலக அணிகள் கோப்பை போட்டியால், டேவிஸ் கோப்பை டென்னிஸுக்கு பாதிப்பு ஏற்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.