ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என வென்ற இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 

நியூசிலாந்துக்கு எதிரான முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி, இன்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என இந்திய அணி வென்றுள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், சரியாக 5 பவுலர்களுடன் இந்திய அணி களமிறங்கியது. அதனால் பார்ட் டைம் பவுலர்கள் இல்லாததால், ராயுடுவை பந்துவீச வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ராயுடுவின் பவுலிங் ஆக்‌ஷன் சர்ச்சைக்கு உள்ளானது. ஐசிசி விதிக்கு மாறாக அவர் பவுலிங் ஆக்‌ஷன் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. 

இதையடுத்து 14 நாட்களுக்குள் தனது பவுலிங்கை சோதனைக்கு உட்படுத்தி சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் அதுவரை ராயுடு பந்துவீசலாம் என்றும் ஐசிசி உத்தரவிட்டிருந்தது. ஐசிசி உத்தரவிட்டு 14 நாட்கள் முடிவடைந்த நிலையில், ராயுடு தனது பவுலிங்கை சோதனைக்கு உட்படுத்தவில்லை என்பதால், அவர் பவுலிங்கை சோதனைக்கு உட்படுத்தும் வரை பந்துவீச தடை விதித்து உத்தரவிட்டுள்ளது ஐசிசி.

நியூசிலாந்து தொடரில் ஆடிவரும் ராயுடு, சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து பந்துவீச வேண்டும் என்றால், தனது பவுலிங் ஆக்‌ஷனை சோதனைக்கு உட்படுத்தி, ஐசிசி விதிப்படி முறையாக பவுலிங் வீசுவதை உறுதி செய்தாக வேண்டும். அதுவரை ராயுடு பந்துவீச முடியாது.