பயங்கரவாத பிரச்னைகளின் காரணமாக இந்திய அணி, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர் ஆடுவதை நிறுத்திவிட்டது. ஐசிசி நடத்தும் சர்வதேச  தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் ஆடிவருகின்றன. அதைத்தவிர இரு நாட்டு அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவதில்லை. 

கடந்த சில ஆண்டுகளாகவே இரு அணிகளும் சர்வதேச தொடர் தவிர வேறு போட்டிகளில் ஆடவில்லை. ஏற்கனவே போடப்பட்டிருந்த ஒப்பந்தப்படி, கடந்த 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் ஆட வேண்டிய தொடர்களிலும் ஆட இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ மறுத்துவிட்டது. மேலும் 2015 முதல் 2023 வரை 6 பரஸ்பர தொடர்களை நடத்த பிசிசிஐ ஏற்பாடு செய்யவில்லை.

இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இழப்பீடு ஏற்பட்டதாகவும் அதற்காக ரூ.447 கோடி ரூபாய் இழப்பீடாக பிசிசிஐ வழங்க வேண்டும் எனக்கோரி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐசிசி) தீர்ப்பாயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழக்கு தொடர்ந்திருந்தது. 

இந்த வழக்கை ஐசிசி தீர்ப்பாயம் விசாரித்தது. அப்போது, புரிந்துணர்வு ஒப்பந்தம் தங்களை கட்டுப்படுத்தாது எனவும், ஐசிசிக்கான வருவாய் பகிர்வு முறையில் தங்களுக்கு ஆதரவு தருவதாக கூறிய உறுதிமொழியை பாகிஸ்தான் கடைபிடிக்கவில்லை எனக்கூறி பிசிசிஐ பதில் மனு தாக்கல் செய்தது. பிசிசிஐ-யின் வாதத்தை ஏற்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. 

இதையடுத்து பிசிசிஐ, இந்த வழக்கின் விசாரணைக்கு தாங்கள் செலவழித்த தொகையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியது. அதை விசாரித்த ஐசிசி தீர்ப்பாயம், இந்திய அணி கோரிய தொகையில் 60 சதவிகித்தை(சுமார் 14 கோடி) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ-க்கு வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

அதே நேரத்தில் வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட மூவர் குழு தீர்ப்பாயத்துக்கு ஆன நிர்வாக செலவுகளில் 40 சதவீதத்தை பிசிசிஐ செலுத்த வேண்டும் என ஐசிசி உத்தரவிட்டது.