ICC must follow rules for diabetes under the Wada system - Sports Minister

வாடா அமைப்பின் விதிகளுக்கு உள்பட்டு ஐசிசி பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஊக்கமருந்து தொடர்பான விதிமுறைகளை ஐசிசி பின்பற்ற வேண்டும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்தார்.

பிசிசிஐ சமீபத்தில் நாடா அமைப்பிற்கு கடிதம் ஒன்றை எழுதியது. அதில், "இந்திய கிரிக்கெட் வீரர்களை நாடா அமைப்பின் சோதனைக்கு உள்படுத்துவதை அனுமதிக்க முடியாது" என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

"கிரிக்கெட் வீரர்களுக்கு தனியார் அரசு அல்லாத அமைப்பின் மூலம் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டு வருவதை அறிவேன். இருப்பினும், இதர விளையாட்டு அமைப்புகளும், மற்ற நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு அமைப்புகளும் நாடா சோதனை மீது நம்பிக்கை கொண்டிருக்கிறது. எனவே, கிரிக்கெட் வீரர்களும், நாடா அமைப்பின் சோதனைக்கு உள்படுத்தப்படுவதை பிசிசிஐ அனுமதித்திருக்கலாம்.

வாடா அமைப்பின் விதிகளுக்கு உள்பட்டு ஐசிசி பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஊக்கமருந்து தொடர்பான விதிமுறைகளை ஐசிசி பின்பற்ற வேண்டும். எனவே, இந்த விவகாரத்தை வாடா அமைப்பின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

விளையாட்டுத் துறையில் மூன்று விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, வீரர் - வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், ரசிகர்கள் ஆகிய மூன்றும் மிக மிக முக்கியமானதாகும்.

ஊக்க மருந்து சோதனையில் வீரர்கள் தோல்வியைச் சந்தித்தால் ரசிகர்கள் ஏமாற்றமடைவார்கள். எனவே, கிரிக்கெட் உள்பட எந்தவொரு விளையாட்டிலும் ரசிகர்கள் ஏமாறாமல் இருப்பதை அந்தந்த விளையாட்டு அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.