icc inquiring about india srilanka galle test matche fixing

இந்தியா இலங்கை இடையே கடந்த ஆண்டு நடந்த காலே டெஸ்ட் போட்டி பிக்ஸிங் செய்யப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக ஐசிசி தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு இலங்கைக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களை ஆடியது. இந்த மூன்று தொடர்களையுமே இந்திய அணி வென்றது. காலே டெஸ்ட் போட்டி பிக்ஸிங் செய்யப்பட்ட ஒன்று என அல் ஜசீரா செய்தி நிறுவனம் ஆவணப்படம் தயாரித்துள்ளது. 

இந்திய அணி பேட்டிங்கில் வலுவான அணி என்பதால், இந்திய அணிக்கு ஏற்ற வகையில், காலே பிட்ச்சை பேட்டிங்கிற்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது. காலே பிட்ச்சை பேட்டிங்கிற்கு சாதகமாக மாற்றுமாறு பிட்ச் பராமரிப்பு துணை மேலாளர் இண்டிகாவிடம் மும்பையை சேர்ந்த சூதாட்ட தரகர் ராபின் மோரிஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.

ராபின் மோரிஸிடம் பணம் பெற்றுக்கொண்டு பிட்ச் பராமரிப்பு துணை மேலாளரும், பேட்டிங்கிற்கு சாதகமாக பிட்ச்சை மாற்றியுள்ளார். பிட்ச்சை பேட்டிங்கிற்கு சாதகமாக மாற்றுவதாக இண்டிகா உறுதியளித்த வீடியோவை வைத்து, அல் ஜசீரா செய்தி நிறுவனம் ஆவணப்படம் தயாரித்துள்ளது. 

சூதாட்டம் நடந்ததாக சொல்லப்படும் அந்த போட்டியில், இந்திய அணி 305 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதேபோல 2016ம் ஆண்டு ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில் பவுலிங்கிற்கு சாதகமாக பிட்ச்சை அமைத்ததாகவும் கூறப்படுகிறது. 

சூதாட்டம் தொடர்பான தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.