ஐசிசி விதிமுறையை மீறியதால், இங்கிலாந்து சீனியர் பவுலர் ஸ்டூவர்ட் பிராடிற்கு அபராதம் விதித்துள்ளது ஐசிசி. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் ஒரு விக்கெட்டே தேவை. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்களையும் இங்கிலாந்து அணி 161 ரன்களையும் எடுத்தது. 168 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது ஆடிய இந்திய அணி 352 ரன்களுக்கு டிக்ளேர் செய்து, இங்கிலாந்து அணிக்கு 521 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 

இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில், நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 210 ரன்கள் தேவை. இந்திய அணிக்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே தேவை. எனவே இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. 

இந்த போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸின்போது, அறிமுக வீரர் ரிஷப் பண்ட்டை அவுட்டாக்கிவிட்டு, அவரிடம் ஆக்ரோஷமாக எதையோ பேசி வழியனுப்பிவைத்தார் ஸ்டூவர்ட் பிராட். அவருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ஐசிசி விதிப்படி, வீரர்களுடன் மோதலில் ஈடுபடுவது, அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்துவது, ஒழுங்கீனமாக நடந்துகொள்வது, வம்பிழுக்கும் வகையிலான ஆக்‌ஷன்களை செய்வது ஆகியவை விதிமீறல் ஆகும். 

அந்த வகையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரிஷப் பண்ட்டின் விக்கெட்டை வீழ்த்திய பிராட், ரிஷப்பிற்கு அருகே சென்று அவரை நோக்கி ஏதோ ஆக்ரோஷமாக பேசினார். அது ஐசிசி விதிமீறல் ஆகும். எனவே ஸ்டூவர்ட் பிராடிற்கு அவரது போட்டி ஊதியத்திலிருந்து 15%-ஐ அபராமதமாக விதித்துள்ளது ஐசிசி.