I will return to number 1 - Roger Federer believes ...
சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மீண்டும் நம்பர் 1 இடத்துக்கு வருவேன் என்று ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
ஏடிபி ரோட்டர்டம் ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதி வரை முன்னேறும் பட்சத்தில் சமீபத்தில் ஆஸ்திரேலியன் ஓபனில் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஃபெடரர் மீண்டும் நம்பர் 1 இடத்துக்கு வர முடியும். அவ்வாறு அவர் மீண்டும் முதலிடத்துக்கு வரும் பட்சத்தில், அதிக வயதில் (36) தரவரிசையில் முதலிடம் பிடித்த வீரர் என்ற பெருமை அவருக்குச் சேரும்.
இந்த நிலையில், நெதர்லாந்தின் ரோட்டர்டம் நகரில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று, "இந்த ஒபனில் வெற்றி பெற்று மீண்டும் தரவரிசையில் முதலிடத்துக்கு வருவேன். அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று தெரியும். இருப்பினும் முயற்சி செய்வேன்.
ஆஸ்திரேலியன் ஓபனில் வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. அந்தத் தொடரில் நம்பர் 1 இடத்துக்கு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் விளையாடவில்லை.
டென்னிஸ் மீது தீராக் காதல் கொண்டிருக்கிறேன். ரோட்டர்டம் ஓபனில் விளையாட ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஓபனில் முதல் சுற்று ஆட்டத்தில் பெல்ஜியம் வீரர் ரூபென் பெமல்பன்ஸை ஃபெடரர் எதிர்கொள்கிறார் என்பது கூடுதல் தகவல்.
