டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போன்று இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்து என்று விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி வழங்கிய அறிவுரையால் தான் நான் சிறப்பாக விளையாட முடிந்தது என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் பல்லகெலே நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியா மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.  இந்திய அணி 21.5 ஓவர்களில் 131 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதால் இந்தியா தோற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 7-வது விக்கெட்டுக்கு இணைந்த தோனியும், புவனேஸ்வர் குமாரும் அபாரமாக ஆடி 100 ஓட்டங்கள் சேர்த்து வெற்றித் தேடித் தந்தனர்.

புவனேஸ்வர் குமார் 80 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள், தோனி 68 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 45 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த புவனேஸ்வர் குமார் கூறியது:

“நான் பேட் செய்வதற்கு களமிறங்கியபோது, டெஸ்ட் போட்டியில் நான் விளையாடக்கூடிய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு தோனி என்னிடம் கூறினார். மேலும், ஏராளமான ஓவர்கள் இருப்பதால், எவ்வித பதற்றமும் இன்றி விளையாடுமாறு தோனி கூறினார். 

நிதானமாக ஆடி இலங்கை பந்துவீச்சாளர்களை திணறவைத்துவிட்டால், எளிதாக இலக்கை எட்ட முடியும் என எங்களுக்குத் தெரியும். நான் பேட் செய்ய வந்தபோது, ஏற்கெனவே 7 விக்கெட்டுகளை இழந்திருந்தோம். அப்போது இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்பது எனக்குத் தெரியும். அதனால் நிதானமாக ஆடலாம். முடிந்த அளவுக்கு தோனிக்கு உதவும் வகையில் விளையாடுவோம் என நினைத்தேன். அதை மட்டுமே நான் முயற்சித்தேன்.

எங்கள் அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். அதன்பிறகு திடீரென 4 விக்கெட்டுகளை இழந்ததால் நாங்கள் பதற்றமான சூழலுக்கு தள்ளப்பட்டோம்.

நான் கடைசி வரை களத்தில் நிற்க வேண்டும் என்றுதான் இந்திய அணி விரும்பியது. நானும் அதையே செய்ய நினைத்தேன். 47 ஓவர்கள் வரை களத்தில் நின்றால் மட்டுமே வெற்றிபெறக்கூடிய வாய்ப்பு இருந்தது. அதுதான் எனது திட்டமாகவும் இருந்தது” என்றார்.

ஒரு நாள் போட்டியில் முதல்முறையாக அரை சதமடித்துள்ளார் புவனேஸ்வர் குமார். கடந்த எட்டு ஆண்டுகளில் ஒரு நாள் போட்டியில் 9-வது பேட்ஸ்மேனாக களமிறங்கி அரை சதமடித்த முதல் இந்தியர் என்ற பெயரை பெற்றார். குமார்தான்.