மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் தோல்விகண்ட ஃபெடரர், "மோசமாக ஆடிய எனக்கு இந்தத் தோல்வி தேவையான ஒன்றுதான்" என்று விரக்தியுடன் தெரிவித்தார்.

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், தகுதிச்சுற்று வீரரான ஆஸ்திரேலியாவின் தனாசி கோக்கினாகிஸிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
 
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவில் நடைபெறுகிறது. சமீபத்தில் இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் தோற்ற நிலையில், தற்போது மியாமி ஓபனில் 2-வது சுற்றிலேயே தோல்வி கண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் ஃபெடரர். 

இந்தப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2-ஆவது சுற்றில் உலகின் 175-ஆம் நிலை வீரரான கோக்கினாகிஸ் 3-6, 6-3, 7-6(7/4) என்ற செட்களில் ஃபெடரரை வீழ்த்தினார்.
 
தோல்விக்குப் பிறகு ஃபெடரர், "மோசமாக ஆடிய எனக்கு இந்தத் தோல்வி தேவையான ஒன்றுதான். சில வேளைகளில் இதுபோன்ற ஆட்டங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். அதிலிருந்து மீண்டு வரவேண்டியிருக்கும். இந்த ஆட்டத்தில் நான் எதையும் சரியாகச் செய்யவில்லை.

இரண்டாவது செட்டின் முதல் கேமில் பிரேக் பாய்ண்ட்டை தவறவிட்டேன். அடுத்து 10 நிமிடங்களு நான் மோசமாக ஆடியதே தோல்விக்குக் காரணம். கோக்கினாஸின் வெற்றிக்காக மகிழ்ச்சி அடைகிறேன். அவரது ஆட்டம் எப்போதுமே பிடித்தமான ஒன்று. 

மியாமி ஓபனில் என்னை வீழ்த்திய அவருக்கு, இது மிகப்பெரிய வெற்றியாகும். நிச்சயம் இது அவரது தரவரிசையில் பிரதிபலிக்கும்" என்று அவர் தெரிவித்தார்.