I have been wronged - why is the captain of the big football team saying that?

ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் 14 மாத தடை விதிக்கப்பட்ட விஷயத்தில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று பெரு கால்பந்து அணி கேப்டன் பாவ்லோ கியுரேரோ அதிருப்தி தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு அக்டோபரில் அர்ஜென்டீனாவுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்துக்குப் பிறகு பாவ்லோவிடம் நடத்திய சோதனையில், அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாகத் தெரியவந்தது. 

இதையடுத்து பாவ்லோவுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்ய, அவரக்கான தடையை 6 மாதமாகக் குறைத்தது ஃபிஃபா.

அந்த தடைக் காலம் கடந்த 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பாவ்லோவுக்கு கிடைத்திருந்தது. 

இந்த நிலையில், பாவ்லோவின் தடைக் காலத்தை குறைத்து ஃபிஃபா பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (வாடா), விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் மன்றத்தில் முறையிட்டது.

அதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட நடுவர் மன்றம், பாவ்லோவுக்கான தடையை 6-ல் இருந்து 14 மாதங்களாக அதிகரித்தது. 

இதையடுத்து தற்போது 2019 ஜனவரி மாதம் வரையில் போட்டிகளில் பங்கேற்க தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் இழந்துள்ளார்.

இதுகுறித்து கேப்டன் பாவ்லோ கியுரேரோ, "எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை. நான் உலகக் கோப்பை போட்டியில் விளையாட இயலாது என்ற எண்ணம் கவலையளிக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.