I had 24 days training for the women team - Harendra Singh ....

ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டிக்கு மகளிர் அணிக்கு 24 நாள்களே பயிற்சி கொடுத்தேன் இருந்தும் வெற்றி பெற்றிருப்பது திருப்தி அளிக்கிறது என்று அணியின் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கூறினார்.

இந்திய மகளிர் வலைகோல் பந்தாட்ட அணி 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய கோப்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இந்திய ஆடவர் இளையோர் ஹாக்கி அணி பயிற்சியாளரான ஹரேந்திர சிங், மகளிர் அணி பயிற்சியாளராக ஆசிய கோப்பை போட்டிக்கு சமீபமாக நியமிக்கப்பட்டிருந்தார்

இந்த நிலையில், மகளிர் அணியின் வெற்றி குறித்து ஹரேந்திர சிங் கூறியது:

“மகளிர் அணி வென்றுள்ள ஆசிய கோப்பை, ஒரு அடித்தளம் மட்டுமே. அவர்கள் இன்னும் அதிகம் சாதிக்க வேண்டியுள்ளது. அடுத்த ஆண்டில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி, உலகக் கோப்பை போட்டி ஆகிய மூன்று முக்கிய போட்டிகள் உள்ளன.

குறைந்தபட்சம் அவற்றில் இரண்டிலாவது இந்திய மகளிர் அணி பதக்கம் வெல்வதே எனது இலக்காகும். இந்த ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியை, ஒரு பயிற்சியாளராக இல்லாமல் கவனித்தேன். அதன்மூலம், முடியாதது எதுவும் இல்லை என்பதை அறிந்துகொண்டேன்.

இந்த ஆண்டு நடைபெற்ற உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக, மகளிர் ஹாக்கியை நான் கவனித்தது இல்லை. ஆனால், அவர்களது வெற்றிக்கும் என்னால் பங்களிப்பு செய்ய இயலும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

ஒரு பயிற்சியாளராக ஒவ்வொரு போட்டியுமே எனக்கு முக்கியமானது. ஆடவர் ஜூனியர் அணியை தயார்படுத்த எனக்கு மூன்று ஆண்டுகள் இருந்தது. ஆனால், மகளிர் அணியை தயார்படுத்த என்னிடம் 23-24 நாள்களே இருந்தது. இரு வெற்றிகளிலும் கிடைக்கும் திருப்தி என்பது வெவ்வேறாக இருக்கும்” என்று ஹரேந்திர சிங் கூறினார்.