ஊக்கமருந்து குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ மேற்கொள்ளும் விசாரணையின் மூலம் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் 74 கிலோ எடைப் பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் பங்கேற்க இருந்த நிலையில், ஊக்கமருந்து பயன்படுத்தியாக அவரை போட்டியிலிருந்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் விலக்கியது.

மேலும், ஊக்கமருந்து பயன்படுத்தியதாக நர்சிங் யாதவ்-க்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனது உற்சாக பானத்தில் சிலர் வேண்டுமென்றே ஊக்கமருந்தை கலந்துவிட்டதாக அவர் புகார் அளித்தார். அது தொடர்பாக சிபிஐ விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக நர்சிங் யாதவ் நேற்று செய்தியாளர்களிடம், “நான் அளித்துள்ள புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் முடிவுக்காக காத்திருக்கிறேன். அதன் மூலம் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

ரியோ ஒலிம்பிக்கில் நான் பங்கேற்றிருந்தால், உறுதியாக பதக்கம் வென்றிருப்பேன். ஏனெனில், அதில் பதக்கம் வென்ற வீரர்களை ஏற்கெனவே வீழ்த்திய அனுபவம் எனக்கு உள்ளது” என்று கூறினார்.