Asianet News TamilAsianet News Tamil

நான் தோனியை மாதிரி கிடையாது.. வேற மாதிரி.. ரோஹித் சர்மா அதிரடி..!

I am not like dhoni and gayle said rohit
I am not like dhoni and gayle said rohit
Author
First Published Dec 14, 2017, 4:52 PM IST


ஒரு நாள் கிரிக்கெட்டில் மூன்றாவது இரட்டை சதம் அடித்து மிரட்டிய ரோஹித் சர்மா, தான் தோனி, கெய்ல், டிவில்லியர்ஸ் போன்ற வலிமை வாய்ந்தவர் அல்ல என்றும் தனது அதிரடியின் ரகசியம் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து தொடங்கிய ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, நேற்று மொஹாலியில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி பெற்றது.

ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஷிகர் தவன் அதிரடியான தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தார். அவருக்குப் பிறகு வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் சிறப்பாக ஆடி 88 ரன்களை குவித்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, 100 ரன்கள் வரை நிதானமாக ஆடிய ரோஹித் சர்மா, அதன்பிறகு ருத்ரதாண்டவம் ஆடினார். மூன்றாவது இரட்டை சதம் அடித்து ரோஹித் சாதனை படைத்தார். முதல் சதத்தை 115 பந்துகளில் அடித்த ரோஹித், இரண்டாவது சதத்தை வெறும் 35 பந்துகளில் எட்டினார்.

ஏற்கனவே 2013ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் 2014ல் இலங்கைக்கு எதிராகவும் இரண்டுமுறை இரட்டை சதம் விளாசிய ரோஹித், நேற்று அடித்தது அவரது மூன்றாவது இரட்டை சதமாகும்.

ஒருநாள் போட்டியில் மூன்றுமுறை இரட்டை சதம் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமைக்கும் சாதனைக்கும் சொந்தக்காரரானார் ரோஹித். ரோஹித்தின் இரட்டை சதத்தால் 393 ரன்களைக் குவித்த இந்திய அணி, 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதன்பிறகு பேசிய ரோஹித் சர்மா, சூழ்நிலைகள், பிட்ச், களவியூகம் ஆகியவற்றை ஆராய்ந்த பிறகே முடிவெடுப்பேன். தொடக்கத்தில் அது சுலபமல்ல. அதனால் முதலில் சில ஓவர்களைத் தள்ளுவோம் என்றே ஆடுவேன்.

நான் ஏ.பி.டிவிலியர்ஸ், தோனி, கிறிஸ் கெய்ல் ஆகியோரைப் போல வலிமை மிக்கவன் அல்ல. நான் எனது மூளையைப் பயன்படுத்தி களவியூகத்துக்கு எதிராக விளையாடுவேன்.

பந்து வரும் திசைக்கு நேராக ஆடுவது என்பதே எனது பலம். சிக்சர்கள் அடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. நிறைய பயிற்சி மற்றும் கடின உழைப்புக்குப் பிறகே சிக்சர்கள் அடிப்பது சாத்தியமாகும். தொலைக்காட்சியில் பார்க்கும்போது எளிதாக தெரியும். ஆனால் கிரிக்கெட்டில் எதுவுமே அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று கூறிய ரோஹித் சர்மா தனது இரண்டாவது திருமண நாளான நேற்று அடித்த இரட்டை சதத்தை தனது மனைவிக்கு பரிசாக அளிப்பதாக தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios