hyderabad defeats delhi daredevils by nine wickets

டெல்லி அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே 42வது ஐபிஎல் லீக் போட்டி டெல்லி ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

வழக்கமாக அதிரடி தொடக்கத்தை கொடுக்கும் பிரித்வி ஷா, நேற்று 9 ரன்களில் வெளியேறினார். ஜேசன் ராயும் 11 ரன்களில் அவுட்டானார். 3 ரன்களில் ஷ்ரேயாஸ் ஐயர் ரன் அவுட் ஆக, 43 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தது டெல்லி அணி. ரிஷப் பண்ட் - ஹர்ஷல் படேல் ஜோடி நிலைத்து நின்று அதிரடியாக ஆடியது. ஹர்ஷல் படேலும் ரன் அவுட்டாக, ரிஷப் பண்ட்டுடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார்.

14 ஓவருக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது டெல்லி அணி. அதன்பிறகு ரிஷப் பண்ட் ருத்ரதாண்டவம் ஆட தொடங்கினார். சிறந்த பவுலிங் அணியாக திகழும் ஹைதராபாத் அணி பவுலர்கள் போடும் பந்தை எல்லாம் விளாச, ஹைதராபாத் அணி செய்வதறியாது திகைத்தது. 

ஷாகிப் அல் ஹாசன் வீசிய 15வது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசினார் பண்ட். சித்தார்த் கௌல் வீசிய 16வது ஓவரில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்தார். 16 ஓவருக்கு 120 ரன்கள். ரஷீத் கான் வீசிய 17வது ஓவரில் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடித்தார் ரிஷப் பண்ட். 

டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவரான புவனேஷ்வர் குமார் 18வது ஓவரை வீசினார். புவனேஷ்வர் குமாரின் அந்த ஓவரில் ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் விளாசினார் பண்ட். சித்தார்த் கவுல் வீசிய 19வது ஓவரில் சதமடித்தார் பண்ட். 

புவனேஷ்வர் குமாரின் 18வது ஓவரை விளாசிய ரிஷப் பண்ட், அவர் வீசிய 20வது ஓவரையும் பறக்கவிட்டார். கடைசி ஓவரின் முதல் பந்தில் மேக்ஸ்வெல் அவுட்டானார். இரண்டாவது பந்தை பண்ட் எதிர்கொண்டார். இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளை பவுண்டரி அடித்தார். கடைசி மூன்று பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்கவிட்ட பண்ட், 63 பந்துகளுக்கு 128 ரன்கள் குவித்தார். டெல்லி அணி 20 ஓவரின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.

188 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 14 ரன்களில் வெளியேறினார். தவானுடன் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த அனுபவ ஜோடி, சிறப்பாக ஆடி இலக்கை விரட்டியது. இந்த இணையை கடைசி வரை டெல்லி பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தவான் - வில்லியம்சன் ஜோடி, 18.5 ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

தவான் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 92 ரன்களும் வில்லியம்சன் 83 ரன்களும் குவித்திருந்தனர். இதையடுத்து ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 18 புள்ளிகளுடன் ஹைதராபாத் அணி முதலிடத்தில் உள்ளது. 

ஷிகர் தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஹைதராபாத் அணியை பேட்டிங்கால் மிரட்டி சதமடித்த ரிஷப் பண்ட்டின் அதிரடி சதம் வீணாயிற்று.