எத்தனை ஆண்டுகள் ஆனாலும், டென்னிஸைப் பற்றி பேசுவதாக இருந்தால் அதில் ஃபெடரரின் பெயர் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும்.

டென்னிஸ் உலகின் தலைசிறந்த வீரர்களில் முதன்மையானவராகத் திகழும் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் 5-ஆவது சாம்பியன் பட்டம் வென்றபோது அவருடைய ஆட்டத்திறன் இன்னும் மங்கிவிடவில்லை என்பதை கண்டு டென்னிஸ் உலகம் வியந்தது.

18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுக்கு சொந்தக்காரரான ஃபெடரர், ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருக்கிறார்.

டென்னிஸ் உலகின் உச்சத்தில் இருந்தாலும், அதை எப்போதுமே அவர் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவருடைய அடையாளமாக சிரித்த முகம் எப்போதும் இருக்கும்.

ஃபெடரரை தலைசிறந்த டென்னிஸ் வீரராக மட்டும்தான் நமக்குத் தெரியும். ஆனால், அவரை சிறந்த விளையாட்டு வீரர் என்பதைத் தாண்டி மனிதநேயமிக்க மனிதர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

ஆம். அவர், எவ்வளவு பெரிய மனிதம் நிறைந்த மனிதர், நன்றி உள்ளம் கொண்டவர்.

ரோஜர் ஃபெடரருக்கு அப்போது வயது 9. அவரை தனது சீடராக ஏற்றுக் கொண்டு டென்னிஸ் பயிற்சி அளித்தார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பயிற்சியாளரான பீட்டர் கார்ட்டர்.

அப்போதே ஃபெடரரின் திறமையை அடையாளம் கண்டுகொண்ட கார்ட்டர், இவர் எதிர்காலத்தில் மிகச் சிறந்த டென்னிஸ் வீரராக வலம் வருவார் என்பதைக் கணித்தார்.

அப்போது முதல் டென்னிஸ் விளையாட்டில் தனக்கு தெரிந்த பல்வேறு உத்திகளை ஃபெடரருக்கு கற்றுக் கொடுத்தார் கார்ட்டர். அவர் எதிர்பார்த்தது போலவே ஃபெடரரும் அசாத்தியமான வீரராக உருவெடுத்தார். சர்வதேச போட்டிகளில் கலக்க ஆரம்பித்தார்.

ஃபெடரர் தனது 21-ஆவது வயதில் டென்னிஸில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார். அந்தத் தருணத்தில் அவருடைய குருவான பீட்டர் கார்ட்டர் மரணமடைய நொறுங்கிப் போனார் ஃபெடரர்.

2002-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி பீட்டர் கார்ட்டர் தனது மனைவியுடன் காரில் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். அப்போது கார்ட்டருக்கு 37 வயது.
கார்ட்டரின் மரணம் ஃபெடரருக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கார்ட்டர் மறைந்தாலும் அவருக்குப் புகழ் சேர்க்க வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டிருந்தார் ஃபெடரர்.

கார்ட்டரையும், அவர் கற்றுக்கொடுத்த பால பாடங்களையும் மனதில் நிறுத்திக் கொண்டு பல்வேறு சாதனைகளைப் படைக்க தொடங்கினார் ஃபெடரர்.
ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடும்போது தனது வளர்ச்சிக்குக் காரணமான பீட்டர் கார்ட்டருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று நினைத்தார் ஃபெடரர். அதனால், 2005 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபனில் தான் விளையாடுகிறபோது கார்ட்டரின் பெற்றோரை போட்டியைக் காண அழைத்து வருவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் வசிக்கும் அவர்களை போட்டி நடைபெறும் மெல்போர்னுக்கு விமானத்தில் முதல் வகுப்பில் அழைத்து வருகிறார் ஃபெடரர். தான் தங்கியிருக்கும் ஹோட்டலிலேயே அவர்களும் தங்குவதற்கு ஏற்பாடு செய்வதோடு, இதர செலவுகள் மொத்தத்தையும் ஃபெடரரே ஏற்றுக் கொள்கிறார்.

ஆஸ்திரேலிய ஓபனின் வெற்றிக் கொண்டாட்டம், அதைத் தொடர்ந்து நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகள் என எல்லாவற்றிற்கும் கார்ட்டரின் பெற்றோரையும் தன்னுடன் அழைத்துச் செல்கிறார் ஃபெடரர்.

ஆஸ்திரேலிய ஓபனின்போது ஃபெடரருடைய குடும்பத்தினருக்காக ஒதுக்கப்படும் சிறப்பு இருக்கையில் அமர்ந்து போட்டியைக் கண்டுகளிக்கும் கார்ட்டரின் பெற்றோர், தங்களுடைய மகன், ஃபெடரருக்குள் இருப்பதாக நம்புகிறார்கள். அதனால் தங்கள் மகனுடைய ஆட்டத்தையே பார்ப்பதாக அவர்கள் நெகிழ்கிறார்கள்.

ஃபெடரர் மனிதம் போற்றும் மனிதர் என்பதற்கு இது சிறந்த உதாரணம் வேண்டும். நல்ல சீடரும் கூட.

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான வீரர்கள் ஒரு கட்டத்துக்குப் பிறகு வெற்றிக்கு அடித்தளமிட்ட பயிற்சியாளர்களையே மறந்துவிடுகிறார்கள். ஆனால் டென்னிஸ் உலகின் உச்சத்தில் இருக்கும் ஃபெடரரோ, தன்னை டென்னிஸ் உலகிற்கு அறிமுகப்படுத்திய கார்ட்டர் மறைந்தபோதிலும், அவருக்கு நன்றிக் கடன் செலுத்தும் விதமாக அவருடைய பெற்றோரை இப்போதும் கெளரவித்துக் கொண்டிருக்கிறார்.

வாழ்வில் எந்த உயரத்துக்கு சென்றாலும், நம் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய நபர்களை என்றுமே மறக்கக் கூடாது என்பதே ஃபெடரரின் வாழ்க்கையிலிருந்து கற்றுத் தரும் பாடம்.