how sachin tendulkar identified the captain in dhoni

தோனியிடம் இருந்த கேப்டன்சி திறமையை கண்டுபிடித்தது எப்படி என்ற ரகசியத்தை சச்சின் டெண்டுல்கர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. தோனியின் கேப்டன்சியின் கீழ், ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டி20 உலக கோப்பை என மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் இந்திய அணி வென்றுள்ளது. 

நெருக்கடியான சூழல்களிலும் பதற்றப்படாமல், நேர்மறையான சிந்தனையோடு வீரர்களை ஊக்கப்படுத்தி வெற்றியை வசப்படுத்துவதால் கேப்டன் கூல் என தோனி அழைக்கப்பட்டார். வெற்றிகரமான கேப்டனாக வலம்வந்த தோனி, தான் கேப்டனானதற்கு சச்சின் மிக முக்கிய காரணம் என பல தருணங்களில் பல மேடைகளில் கூறியுள்ளார்.

2007 உலக கோப்பையில், லீக் சுற்றுடன் டிராவிட் தலைமையிலான இந்திய அணி வெளியேறியது. அந்த தோல்விக்கு பொறுப்பேற்று டிராவிட் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார். அதற்கடுத்த கேப்டன் தேடுதலின்போது, அணியில் தோனியைவிட சீனியர்கள் சிலர் இருந்தும்கூட, அப்போதைய இளம் வீரரான தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். சச்சின் உள்ளிட்ட சில அனுபவ சீனியர் வீரர்களின் ஆதரவு தோனிக்கு இருந்தது. அவர்கள் தோனியிடம் கண்ட தலைமைப் பண்புகளின் காரணமாக தோனிக்கு ஆதரவாக இருந்தனர்.

அவர்களில் முக்கியமானவர் சச்சின் டெண்டுல்கர். இந்நிலையில், தோனியிடம் இருந்த கேப்டன்சி திறனை கண்டறிந்தது எப்படி என சச்சின் தெரிவித்துள்ளார். ”பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ்” என்ற நிகழ்ச்சியில் சச்சின் இதுதொடர்பாக பேசியுள்ளார்.

தோனியிடம் இருந்த கேப்டன்சி திறனை கண்டுபிடித்தது தொடர்பாக பேசிய சச்சின், நான் ஸ்லிப்பில் ஃபீல்டிங் செய்யும்போதெல்லாம், விக்கெட் கீப்பிங் செய்யும் தோனியிடம் ஃபீல்டிங் பொசிசன் குறித்து விவாதிப்பேன். அப்போது எனது கருத்தை தெரிவித்துவிட்டு அவரது கருத்தையும் கேட்பேன். அவரும் கூறுவார். அப்போதுதான் அவரிடம் இருந்த கேப்டன்சி திறன், கிரிக்கெட் தெளிவு குறித்து தெரிந்துகொண்டேன் என சச்சின் தெரிவித்துள்ளார்.