6000 டெஸ்ட் ரன்களை கடந்த விராட் கோலிக்கு அதை குறிப்பிடும் வகையில் வித்தியாசமான முறையில் ஹோட்டல் ஊழியர்கள் கொடுத்த சர்ப்ரஸை கண்டு விராட் கோலி நெகிழ்ந்து போனார். 

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. நான்காவது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களும் இந்திய அணி 273 ரன்களும் எடுத்துள்ளன. இரண்டாவது இன்னிங்ஸை இங்கிலாந்து அணி ஆடிவருகிறது. 

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 46 ரன்களை எடுத்தார். இந்த இன்னிங்ஸில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000 ரன்கள் என்ற மைல்கல்லை கோலி எட்டினார். 119வது இன்னிங்ஸில் கோலி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். விரைவில் 6000 டெஸ்ட் ரன்களை எட்டிய இந்திய வீரர்கள் பட்டியலில் 117 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டிய கவாஸ்கர் முதலிடத்திலும் கோலி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். 

இந்நிலையில், கோலி 6000 ரன்களை எட்டியதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், சாப்பாட்டு தட்டில் 6000 என எழுதி செர்ரி பழங்கள் மற்றும் கேக்குகளை வைத்து அலங்கரித்து கோலிக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர் ஹோட்டல் ஊழியர்கள். இதை கண்டு நெகிழ்ந்துபோன கோலி, அதை போட்டோ எடுத்து டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.