கிரிக்கெட்டில் தனது அதிரடியான பேட்டிங்கால் பூம் பூம் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடியின் கருத்துகளும் அதிரடியாகத்தான் இருக்கும். 

குறிப்பாக அவ்வப்போது காஷ்மீர் குறித்த அதிரடியான கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்குவார். அதேபோல தற்போதும் அதிரடியான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். லண்டனில் பேசிய அஃப்ரிடி, காஷ்மீர் குறித்து தடாலடியாக பேசியுள்ளார். அதுவும் பாகிஸ்தான் அரசை நேரடியாக சாடியுள்ளார். 

காஷ்மீர் குறித்து பேசிய அஃப்ரிடி, என்னைப் பொறுத்தவரையில் காஷ்மீர் பாகிஸ்தானுக்கு தேவையில்லை. அதேநேரத்தில் காஷ்மீரை இந்தியாவுக்கும் தர வேண்டாம். காஷ்மீர் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். குறைந்தபட்சம் மனிதமாவது உயிருடன் இருக்கட்டும். நிச்சயமாகப் பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை. இங்கு இருக்கும் 4 மாகாணங்களையே பாகிஸ்தானால் முறையாகப் பராமரிக்க முடியவில்லை. இதில் காஷ்மீர் வேறு தேவையா? எந்த சமூகத்தில் மரணம் நிகழ்ந்தாலும் அது வலி தரக்கூடியதுதான் என்று அதிரடியாக பேசியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் காஷ்மீரில் நிலவும் சூழல் தனக்குக் கவலை அளிப்பதாகவும், இந்த விவகாரத்தில் ஐ.நா தலையிட வேண்டும் என அஃபிரிடி கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக உள்ள இநிலையில், கிரிக்கெட் வீரர் அஃப்ரிடியின் இந்தக் கருத்து அந்நாட்டில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. 

காஷ்மீர் விவகாரத்தில் அஃப்ரிடியின் கருத்து சரியானதுதான் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் பேசிய ராஜ்நாத் சிங், சொந்த நாட்டையே கையாள முடியாத பாகிஸ்தான் அரசு, காஷ்மீரை எப்படி சமாளிக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.