இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை நான்கு விக்கெட்டுகளை இழந்துவிட்ட போதிலும், அந்த அணியின் ஹெட்மயர் இந்திய அணியின் பவுலிங்கை அடித்து ஆடிவருகிறார். 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி குவாஹத்தியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பவுலிங் தேர்வு செய்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் ஆடிவருகிறது. 

தொடக்க வீரர்களாக கிரன் பவல் மற்றும் சந்தர்பால் ஹேம்ராஜ் ஆகிய இருவரும் களமிறங்கினர். ஷமி வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கினார் பவல். அதன்பிறகு மீண்டும் ஷமி வீசிய 3வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார் ஹேம்ராஜ்.

இதையடுத்து 5வது ஓவரை வீசிய ஷமி, ஹேம்ராஜின் விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பிறகு பவலுடன் ஷாய் ஹோப் ஜோடி சேர்ந்தார். பவல் தொடர்ந்து அதிரடியாக ஆடி பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசினார். 39 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உட்பட 51 ரன்கள் குவித்த பவல், இந்திய அணியின் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். 

அதன்பிறகு களத்திற்கு வந்த அந்த அணியின் அனுபவ வீரர் சாமுவேல்ஸ் இரண்டவது பந்திலேயே சாஹலின் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். சிறப்பாக ஆடிவந்த அவசரப்பட்டு ஷமி பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து 32 ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து ஹெட்மயருடன் ரோமன் பவல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய பவுலிங்கை அடித்து ஆடிவருகிறது. குறிப்பாக ஹெட்மயர், இந்திய அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்குகிறார். குவாஹத்தியில் சிக்ஸர் மழை பொழிகிறார் ஹெட்மயர். அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த ஹெட்மயர், 4 சிக்ஸர்களை விளாசியுள்ளார். தொடர்ந்து அதிரடியாக ஆடிவருகிறார்.

பவுண்டரிகளாக விளாசி வந்த பவலை கிளீன் போல்டாக்கி அனுப்பினார் ஜடேஜா. 22 ரன்களில் பவல் ஆட்டமிழந்தார். 30.3 ஓவருக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை எடுத்து ஆடிவருகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஹெட்மயர் 66 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருடன் அந்த அணியின் கேப்டன் ஹோல்டர் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.