இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஹெட்மயரின் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என இழந்தது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 361 ரன்கள் என்ற கடின இலக்கை எளிதாக எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இதையடுத்து நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் கெய்லும் கேம்பெலும் இணைந்து ஓரளவிற்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 61 ரன்கள் சேர்த்தனர். கேம்பெல் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் சதமடித்த கெய்ல், இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து 50 ரன்களில் அவுட்டானார். ஷாய் ஹோப் 33 ரன்களிலும் டேரன் பிராவோ 25 ரன்களிலும் கேப்டன் ஹோல்டர் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் 5ம் வரிசையில் இறங்கிய ஹெட்மயர் மறுமுனையில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி சதமடித்தார் ஹெட்மயர். 83 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 104 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. ஹெட்மயரின் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 289 ரன்களை சேர்த்தது. 

290 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரும் 10 ரன்களுக்கு உள்ளாகவே ஆட்டமிழந்தனர். கடந்த போட்டியில் அபார சதமடித்த ராய், இந்த போட்டியில் 2 ரன்களில் வெளியேறினார். ஜோ ரூட் தன் பங்கிற்கு 36 ரன்கள் அடித்தார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த இயன் மோர்கனும் பென் ஸ்டோக்ஸும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். இருவருமே அரைசதம் அடித்தனர். எனினும் கடைசி வரை நின்று போட்டியை வெற்றிகரமாக முடிவிக்கவில்லை. இருவருமே தலா 70 ரன்களை கடந்து ஆட்டமிழந்தனர். இவர்கள் ஆட்டமிழந்த பிறகு மளமளவென எஞ்சிய விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி, 47.4 ஓவரில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என வெஸ்ட் இண்டீஸ் அணி சமன் செய்துள்ளது. 

கடந்த போட்டியில் 361 ரன்கள் என்ற இலக்கை எளிதாக எட்டியபிறகு பேசிய இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், நல்ல பேட்டிங் டெப்த் உள்ளதால் இங்கிலாந்து அணியால் எவ்வளவு பெரிய இலக்கையும் எட்டிவிட முடியும் என கெத்தாக பேசினார். இந்நிலையில், அடுத்த போட்டியிலேயே 290 ரன்கள் என்ற இலக்கையே எட்ட முடியாமல் மண்ணை கவ்வியுள்ளது இங்கிலாந்து அணி.