நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 4-1 என தொடரை வென்று அசத்தியது. 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் என அனைத்து வகையிலும் நியூசிலாந்து அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிய இந்திய அணி, நான்காவது போட்டியில் மட்டும் படுமோசமாக சொதப்பி படுதோல்வியடைந்தது. பின்னர் ஐந்தாவது போட்டியில் அந்த படுதோல்வியிலிருந்து மீண்டு ஒரு அணியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி கண்டது. 

இந்த போட்டியில் 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ராயுடு மற்றும் விஜய் சங்கர் பொறுப்புடன் ஆடி, அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். பின்னர் இறுதி ஓவர்களில் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸர்களுமாக விளாசி, அணியின் ஸ்கோரை உயர்த்தினார் ஹர்திக் பாண்டியா. பேட்டிங்கில் மிரட்டிய பாண்டியா, பவுலிங்கிலும் அசத்தினார். 

இந்திய அணியின் பேட்டிங்கின்போது ஹர்திக் பாண்டியாவும் புவனேஷ்வர் குமாரும் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு சம்பவம் நடந்தது. 49வது ஓவரை நீஷம் வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை பாண்டியா அடிக்க, பாண்டியாவும் புவனேஷ்வர் குமாரும் இரண்டு ரன்கள் ஓடினர். ஆனால் பாண்டியா முதல் ரன்னை முடிக்கும்போது பேட்டை கிரீஸில் வைக்கும்போது பேட் அவரது கையிலிருந்து விடுபட்டு கிரீஸுக்குள் விழுந்தது. கிரீஸை தொடும்போது பேட் அவரது கையில் இல்லை. எனினும் தொடர்ந்து 2வது ரன்னை ஓடி முடித்துவிட்டார். இதை பார்த்த டிரெண்ட் போல்ட், அம்பயரிடம் அந்த ரன் சரியாக ஓடி முடிக்கப்பட்டதா என்பதை டிவியில் ரிவியூ செய்து பார்க்குமாறு செய்கை காட்டினார். பின்னர் அதை ரிவியூ செய்து பார்த்ததில் முழுதாக முடிக்கப்படாத ரன் என்பதால் ஒரு ரன் மட்டுமே கொடுக்கப்பட்டது. 

இதேபோன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில், தோனி அவசரமாக ஒரு ரன்னை முடிக்காத சம்பவம் நடந்தது. ஆனால் அது கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக பாண்டியா சிக்கிவிட்டார்.