hardik pandya will play for which team in next IPL
2015-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் அறிமுகமாகி, தனது அசாத்தியமான அதிரடியால் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் ஹர்திக் பாண்டியா.
இவரும் இவரது சகோதரரான குருனல் பாண்டியாவும் 2015-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் அறிமுகமாகினர். இருவரும் நன்றாக விளையாடக் கூடியவர்கள்தான் என்றாலும் ஹர்திக் பாண்டியா, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
2015 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரை வென்றதற்கு ஹர்திக் பாண்டியாவின் அதிரடி பங்கு அளப்பரியது.

இதையடுத்து ஹர்திக் பாண்டியாவின் திறமையை பார்த்து, 2016ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 போட்டியிலும், நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியில் இடம் கிடைத்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில், டாப் ஆர்டர்கள் அனைவரும் மளமளவென விக்கெட்டுகளை இழக்க, தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணிக்கு, தனது அசாத்தியமான அதிரடியால் நம்பிக்கை கொடுத்தார் ஹர்திக். அவர் பறக்கவிட்ட அடுத்தடுத்த சிக்ஸர்களை கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. ஆனால், அவர் ரன் அவுட் ஆகி வெளியேற இந்திய அணி தோற்றது.
ஆனாலும், ஹர்திக்கின் அதிரடி அனைவரின் மனதிலும் ஆழப்பதிந்துவிட்டது. இதையடுத்து நடந்த வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான அனைத்து தொடர்களிலும் ஹர்திக் பாண்டியா இடம்பிடித்தார்.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் ஹர்திக் பாண்டியாவை, அடுத்த ஐபிஎல் தொடரில் எத்தனை கோடி கொடுத்தேனும் இழுத்துவிட அனைத்து அணிகளும் தயாராக உள்ளன.
ஆனால், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஹர்திக் பாண்டியா, எனக்கு வாழ்க்கை கொடுத்ததே மும்பை அணிதான். சச்சின், பாண்டிங் போன்ற ஜாம்பவான்களின் ஆலோசனை எனக்கு கிடைத்தது. அடுத்த ஐபிஎல் தொடரில் நான் வேறு அணிக்கு விளையாடப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் அது உண்மையில்லை. எனக்கு வாழ்வளித்த மும்பை அணிக்காகத்தான் அடுத்த ஆண்டும் விளையாடுவேன் என தெரிவித்தார்.
