தற்போதைய இந்திய அணியின் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மட்டும்தான். அதனால் வேகப்பந்து வீச்சுக்கு ஆதரவாக இருக்கும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் ஹர்திக் பாண்டியாவால் சோபிக்க முடியும். எனினும் அவர் காயத்திலிருந்து குணமடையாததால் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படவில்லை. 

கடந்த செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா, அதிலிருந்து குணமடையாததால் வெஸ்ட் இண்டீஸ் தொடரை இழந்தார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் அவரது பெயர் இடம்பெறவில்லை. 

அதேநேரத்தில் ஹர்திக் பாண்டியா உடற்தகுதி பெற்றுவிட்டால் அணியில் சேர்க்கப்படுவார். காயத்திலிருந்து பாண்டியா மீண்டிருந்தாலும் போட்டியில் ஆடுவதற்கான உடற்தகுதியை பெற்றிருக்கிறாரா என்பதை சோதிப்பது அவசியம். ஒருவேளை உடற்தகுதி பெற்றிருந்தால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆட வாய்ப்புள்ளது. டெஸ்ட் போட்டியில் இல்லாவிட்டாலும் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் ஒருநாள் தொடரில் ஆடலாம். 

எனவே ரஞ்சி டிராபியில் ஆடி உடற்தகுதியை நிரூபிக்குமாறு பாண்டியாவை பணித்திருந்தது தேர்வுக்குழு. அந்த வகையில் வரும் 14ம் தேதி மும்பைக்கு எதிரான ரஞ்சி போட்டியில் மோதும் பரோடா அணியில் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டுள்ளார். 

ஹர்திக் பாண்டியா அந்த போட்டியில் ஆடி உடற்தகுதியை நிரூபித்துவிட்டால், டிசம்பர் 26ம் தேதி மெல்போர்னில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் அணியில் சேர்க்கப்படுவாரா என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.