இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என இந்திய அணி முன்னிலை வகித்துவரும் நிலையில் மூன்றாவது போட்டி மவுண்ட் மாங்கனியில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் இந்திய அணி இரண்டு மாற்றங்களுடனும் நியூசிலாந்து அணி ஒரு மாற்றத்துடனும் களமிறங்கியது. இந்திய அணியின் சீனியர் வீரரும் விக்கெட் கீப்பருமான தோனிக்கு தொடையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் ஆடுகிறார். சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு மீண்டும் இந்திய அணியில் இணைந்த ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கருக்கு பதிலாக ஆடுகிறார். நியூசிலாந்து அணி கிராண்ட்ஹோமுக்கு பதிலாக மீண்டும் சாண்ட்னெரை அணியில் எடுத்துள்ளது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணியிடம் படுதோல்வி அடைந்த நியூசிலாந்து அணி, இந்த போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பிவருகிறது. 

தொடக்க வீரர்கள் கப்டிலும் முன்ரோவும் வழக்கம்போலவே இந்த போட்டியிலும் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஷமி வீசிய இரண்டாவது ஓவரிலேயே முன்ரோ 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷமியின் பந்தில் ஸ்லிப்பில் நின்ற ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து முன்ரோ ஆட்டமிழந்தார். 

இதையடுத்து கப்டிலுடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். புவனேஷ்வர் குமார் வீசிய 7வது ஓவரின் முதல் பந்தில் கப்டில் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து வில்லியம்சனுடன் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இவர்களும் பார்ட்னர்ஷிப் அமைக்க தவறிவிட்டனர். 

பெண்கள் குறித்து இழிவாக பேசி சர்ச்சையில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ள ஹர்திக் பாண்டியா, வில்லியம்சனின் கேட்ச்சை அபாரமாக பிடித்து செம கம்பேக் கொடுத்தார். சாஹலின் பந்தை வில்லியம்சன் டிரைவ் ஆட, மிட் விக்கெட் திசையில் நின்ற ஹர்திக் பாண்டியா அபாரமாக டைவ் அடித்து அதை கேட்ச் செய்தார். ஹர்திக்கின் மிரட்டலான கேட்ச்சால் 28 ரன்களில் நடையை கட்டினார் வில்லியம்சன். 

மிகச்சிறந்த ஃபீல்டரான ஹர்திக் பாண்டியா, இந்திய அணியில் தனது இருப்பின் முக்கியத்துவத்தை ஒற்றை கேட்ச்சில் நிரூபித்தார். துவண்டுபோயிருந்த ஹர்திக் பாண்டியாவிற்கு இது சிறந்த கம்பேக். வில்லியம்சனின் விக்கெட்டை அடுத்து, டெய்லரும் லதாமும் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிவருகின்றனர்.