இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னர் அஷ்வினை கடுமையாக சாடியுள்ளார் ஹர்பஜன் சிங்.

இந்திய அணியின் முதன்மையான மற்றும் அனுபவம் வாய்ந்த ஸ்பின் பவுலரான அஷ்வின், வெளிநாட்டு தொடர்களில் தொடர்ந்து காயமடைந்து வருவது வருத்தத்திற்குரிய விஷயம் மட்டுமல்லாமல், அணிக்கும் நல்லதல்ல. இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் தொடரின் பாதியில் காயமடைந்த அஷ்வின், எஞ்சிய போட்டிகளில் ஆடவில்லை. 

ஆஸ்திரேலிய தொடரிலும் அடிலெய்டு டெஸ்டில் நன்றாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், அந்த போட்டியில் காயமடைந்ததால் அடுத்த மூன்று போட்டிகளிலும் ஆடவில்லை. இவற்றில் பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் அஷ்வின் காயத்தால் ஆடாததால், ஸ்பின் பவுலரே இல்லாமல் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கிய இந்திய அணி படுதோல்விய தழுவியது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்பின்னர் நாதன் லயனின் பவுலிங்தான் இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக அமைந்தது. அதன்பிறகு மெல்போர்ன் டெஸ்டில் ஜடேஜாவும் சிட்னி டெஸ்டில் ஜடேஜா மற்றும் குல்தீப்பும் அணியில் சேர்க்கப்பட்டனர். 

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளிலுமே ஒரு தொடரில் கூட அனைத்து போட்டிகளிலும் அஷ்வின் ஆடவில்லை. இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னரான அஷ்வின் அடிக்கடி காயமடைந்து, முக்கியமான போட்டிகளில் ஆடாமல் இருப்பது அணியை பாதிக்கிறது. இதுகுறித்த வருத்தத்தையும் ஆதங்கத்தையும் முன்னாள் கேப்டன் கங்குலி ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தார். 

இந்நிலையில், அஷ்வினை கடுமையாக சாடியுள்ளார் ஹர்பஜன் சிங். அஷ்வின் குறித்து பேசிய ஹர்பஜன் சிங், இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் போட்டியில் அஷ்வின் நன்றாக வீசினார். அதுதான் கடைசி; அத்துடன் காணாமல் போய்விட்டார். சௌத்தாம்ப்டன் டெஸ்ட் போட்டியில் மொயின் அலி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். அந்த போட்டியில் அஷ்வின் சரியாக வீசவில்லை. அதன்பிறகு ஆஸ்திரேலியாவில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் முதல் மூன்று விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தினார். ஆனால் அடுத்த மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த அவருக்கு 52 ஓவர்கள் தேவைப்பட்டன. வெளிநாடுகளில் அஷ்வின் பந்துவீச்சு ரெக்கார்டு அவ்வளவு சிறப்பாக இல்லை. சிட்னி டெஸ்டில் ஜடேஜாவும் குல்தீப்பும் அருமையாக பந்துவீசி வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றனர். மழை பெய்யவில்லை என்றால், இந்திய அணி சிட்னி டெஸ்டில் வென்றிருக்கும். குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். எனவே ஜடேஜா - குல்தீப் ஸ்பின் ஜோடி தொடர்ந்து ஆட வேண்டும். 

அணியின் முதன்மை ஸ்பின்னர் இந்தியாவில் மட்டும் நன்கு பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்துவிட்டு, வெளிநாடுகளில் எப்போது பார்த்தாலும் காயம் காயம் என்று கூறி முக்கியமான போட்டிகளில் ஆடாமல் இருப்பது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதற்கு மாற்று ஐடியாவை யோசித்தே தீர வேண்டும். கடினமான சூழல்களில் அணிக்காக ஆடாமல் இருப்பது சரியல்ல, நல்லதுமல்ல என்று அஷ்வினை கடுமையாக சாடியுள்ளார் ஹர்பஜன் சிங். 

அஷ்வினை வைத்துத்தான் ஹர்பஜன் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவைத்தார் தோனி. அஷ்வினால் தான் ஓரங்கட்டப்பட்ட வேதனை ஹர்பஜனுக்கு கண்டிப்பாக இருந்திருக்கும். அதனால்தான் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அஷ்வினை வச்சு செய்யும் ஹர்பஜன் சிங், இந்த முறையும் தனது பணியை செவ்வனே செய்துள்ளார்.