ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று இந்திய அணியின் முன்னாள் ஸ்பின் பவுலர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பதால், எதிரணி மீது ஆதிக்கம் செலுத்தி இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்கின்றனர். 

குறிப்பாக விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் அபாயகரமான வீரர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. விராட் கோலி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழ்ந்துவருகிறார். நேரத்திற்கு தகுந்தாற்போல ஆடி அணியை நல்ல நிலைக்கு அழைத்து செல்வது அவரது பணி. அவர் அதை சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார். 

அதேபோல சிறந்த தொடக்கத்தை அமைத்து கொடுப்பது தொடக்க வீரர்களின் பணி. அதை ரோஹித்தும் தவானும் சிறப்பாகவே செய்துகொண்டிருக்கின்றனர். ரோஹித் சர்மா ஆரம்பத்தில் மந்தமாக ஆடினாலும் களத்தில் நிலைத்துவிட்டால், அவரை வீழ்த்துவது மிகக்கடினம். அவர் களத்தில் நிலைத்துவிட்டால், மிகப்பெரிய இன்னிங்ஸை ஆடி இமாலய ஸ்கோரை அடித்து விடுவார். 

இவ்வாறு சமகால இந்திய அணியின் சிறந்த வீரர்களாக திகழும் ரோஹித்தும் கோலியும் பல்வேறு சாதனைகளை புரிந்துவருகின்றனர். இருவரும் தனித்தனியாகவும், சேர்ந்தும் பல சாதனைகளை செய்துவருகின்றனர். சர்வதேச ஒருநாள் தரவரிசையில் இருவரும் முதலிரண்டு இடங்களில் உள்ளனர். கோலி முதலிடத்திலும் ரோஹித் இரண்டாமிடத்திலும் உள்ளனர். 

இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து ஆடினாலே அதகளம்தான். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருவருமே சதம் விளாசினர். இரண்டாவது விக்கெட்டுக்கு 246 ரன்களை குவித்து பல சாதனைகளை புரிந்தனர்.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல என்று நிரூபித்துவரும் நிலையில், ரோஹித் மற்றும் கோலி குறித்து பேசியுள்ள ஹர்பஜன் சிங், ரோஹித் சர்மா வேற லெவல் வீரர். விராட்டும் ரோஹித்தும் ஜோடி சேர்ந்துவிட்டால் அவர்களில் யார் சிறந்த வீரர் என்று சொல்வது கடினம். நம்பர் 1 மற்றும் நம்பர் 2 ஆகிய இடங்களுக்கு இருவரும் தகுதியானவர்கள். என்னை பொறுத்தவரை இருவருமே நம்பர் 1 தான். விராட் - ரோஹித் ஜோடியும் நம்பர் 1 ஜோடி என ஹர்பஜன் கருத்து தெரிவித்துள்ளார்.