உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு ஒன்றிரண்டு வீரர்களை தவிர மற்ற வீரர்கள் உறுதி செய்யப்பட்டு விட்டனர். 

ரோஹித், தவான், கோலி என டாப் ஆர்டர் வலுவாக உள்ளது. புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் என பவுலர்களும் உறுதி செய்யப்பட்டதுதான். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக ராயுடு, தோனி, கேதர் ஜாதவ் ஆகியோர் இருப்பர். உலக கோப்பைக்கு முந்தைய தொடரான ஆஸ்திரேலிய தொடரில் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

எனவே உலக கோப்பை அணியில் ரிஷப் பண்ட் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கேஎல் ராகுல் ஆஸ்திரேலிய தொடரில் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளதால் ரிசர்வ் தொடக்க வீரராக உலக கோப்பைக்கு அவர் தான் அழைத்து செல்லப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் ரிஷப் பண்ட்டை மாற்று தொடக்க வீரராக பயன்படுத்தலாம் என்ற கருத்தையும் பல முன்னாள் வீரர்கள் முன்வைத்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், உலக கோப்பை அணியில் தங்களுக்கான இடத்தை உறுதி செய்துகொள்ள ரிஷப் பண்ட்டுக்கும் ராகுலுக்கும் ஆஸ்திரேலிய தொடர் அருமையான வாய்ப்பு. ஒருவேளை இந்த தொடரில் ராகுல் சரியாக ஆடவில்லை என்றாலும் ஆச்சரியப்படுவதற்கோ வருத்தப்படுவதற்கோ எதுவுமில்லை. ராகுலை நீக்கிவிட்டு ரிஷப் பண்ட்டை உலக கோப்பை அணியில் ரிசர்வ் தொடக்க வீரராக வைத்துக்கொள்ளலாம். தினேஷ் கார்த்திக்கையும் அணியில் எடுக்கலாம் என்று ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.