சிட்னி டெஸ்டில் ஹனுமா விஹாரியின் விக்கெட் சர்ச்சையை கிளப்பியுள்ளது. விஹாரிக்கு அவுட் கொடுத்தது சரியான முடிவு அல்ல என்றே ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் மைக் ஹஸி, மைக்கேல் கிளார்க் ஆகியோரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கும் நிலையில், சிட்னியில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வென்றாலோ அல்லது போட்டி டிரா ஆனாலோ, தொடரை இந்திய அணி தான் வெல்லும். ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் வென்றால் மட்டுமே இந்திய அணி தொடரை வெல்வதை தடுக்க முடியும். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை. 

ஏனெனில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 622 ரன்களை குவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில்தான் முதல் இன்னிங்ஸை தொடங்கியே உள்ளது. எனவே 3 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால், ஒன்று இந்திய அணி போட்டியை வெல்லும், இல்லையென்றால் டிராவில் முடியும்.

எனவே இந்திய அணி தொடரை வெல்வது உறுதியாகிவிட்டது. இந்நிலையில், இந்த போட்டியில் இரண்டாம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஹனுமா விஹாரி ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்டத்தில் 39 ரன்கள் எடுத்து களத்தில் இருந்த ஹனுமா விஹாரி, இன்றைய ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்து 42 ரன்களில் ஆட்டமிழந்தார். நாதன் லயனின் சுழலில் லாபஸ்சாக்னேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அந்த வீடியோவை ஆராய்ந்துதான் மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்தார். ஆனால் பந்து பேட்டில் பட்டதா என்பது பெரும் சர்ச்சையானது. பேட்டில் பந்து படாதது மாதிரியே தெரிந்தது. ஆனால் ஸ்னிக்கோவில் பேட்டில் உரசியதுபோன்று காட்டியது. 

 

ஹனுமா விஹாரிக்கு அவுட் கொடுத்து அவர் வெளியேறினாலும், அந்த சர்ச்சை முடிந்த பாடில்லை. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் மைக் ஹஸி மற்றும் மைக்கேல் கிளார்க் ஆகிய இருவருமே, பந்து பேட்டில் படவில்லை என்றும் விஹாரிக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும் கருத்து தெரிவித்தனர்.