தியோதர் டிராபி தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் ஹனுமா விஹாரி அபாரமாக ஆடினார். அவரது சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி 50 ஓவர் முடிவில் 261 ரன்கள் எடுத்துள்ளது. 

தியோதர் டிராபி தொடர் இன்று தொடங்கியுள்ளது. வரும் 27ம் தேதி வரை இந்த தொடர் நடக்க உள்ளது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்தியா ஏ, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா பி மற்றும் ரஹானே தலைமையிலான இந்தியா சி அணிகள் கலந்துகொண்டு ஆடுகின்றன. 

டெல்லி ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதையடுத்து இந்தியா பி அணியின் தொடக்க வீரர்களாக கெய்க்வாட் மற்றும் மயன்க் அகர்வால் களமிறங்கினர். கெய்க்வாட் 2 ரன்களில் அவுட்டாக, அகர்வால் 46 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு ஆட்டமிழந்தார். இந்தியா பி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 41 ரன்களும் மனோத் திவாரி 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

சிறப்பாக ஆடிய ஹனுமா விஹாரி 95 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அந்த அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹனுமா விஹாரி இடம்பெற்றிருந்தாலும் ஆடும் லெவனில் இடம்கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்த போட்டியில் சிறப்பாக ஆடியுள்ளார். இவரது பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா பி அணி 50 ஓவர் முடிவில் 261 ரன்களை குவித்துள்ளது. 

தினேஷ் கார்த்திக் தலைமையிலான பிரித்வி ஷா, கருண் நாயர், குருணல் பாண்டியா ஆகிய வீரர்களை கொண்ட இந்தியா ஏ அணி 262 ரன்கள் என்ற இலக்குடன் ஆட உள்ளது.