Gold for Gummidipoondi students in Asian-Pacific Yogasana competition

ஆசிய - பசிபிக் யோகாசனப் போட்டியில் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த யோகா மாணவர்கள் ஆர்.லோகேஷ், டி.பிரவீண்குமார் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

ஆசிய-பசிபிக் யோகாசன சாம்பியன் ஷிப் போட்டி சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டியை அடுத்த சாமிரெட்டி கண்டிகையைச் சேர்ந்தவர் ஆர்.லோகேஷ். ஆத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் டி.பிரவீண்குமார். இருவரும் கடந்த 13, 14-ஆம் தேதிகளில் இந்தப் போட்டிகளில் பங்கேற்றனர்.

ஆறு பிரிவுகளில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற இப்போட்டிகளில், 10 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் ஆர்.லோகேஷ் தங்கப் பதக்கத்தை வென்றார்.

அதேபோல் 15 முதல் 20 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் டி.பிரவீண் குமார் இரு பிரிவு போட்டிகளில் பங்கேற்று 1 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

வெற்றிப் பெற்ற மாணவர்கள் இருவரும் நாடு திரும்பியதும் அவர்களது பகுதி மக்கள் மாணவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்று பாராட்டினர்.

மேலும், தங்க பதக்கம் வென்ற இருவரையும் அவர்களது பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் பாராட்டி இனிப்பு வழங்கினார்.