களத்தில் சச்சின் தன்னை சீண்டிய சம்பவத்தை 18 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் பகிர்ந்துள்ளார்.

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் பேட்டிங்கில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். சர்வதேச கிரிக்கெட்டில் 35,000 ரன்களை குவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், களத்தில் எதிரணி வீரர்களுடன் வீண் சண்டைக்கோ வம்புக்கோ செல்லாதவர். அவரது ஆட்டத்தை பொறுக்கமுடியாத பவுலர்கள் அவரை சீண்டும் விதமாக வம்பிழுத்தாலும் கூட, அவற்றிற்கெல்லாம் தனது பேட்டிங்கின் மூலமாகவே பதிலடி கொடுப்பாரே தவிர வாய்ச்சொல்லில் பதிலடி கொடுக்கமாட்டார். 

சச்சின் ஆடிய காலக்கட்டத்தில் அவரை அதிகமுறை அவுட்டாக்கியவர்களில் முதன்மையானவர்கள் ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத்தும், இலங்கையின் சமிந்தா வாஸும்தான். அதே நேரத்தில் அவர்களின் பவுலிங்கில் சச்சின் அதிகமான ரன்களையும் குவித்துள்ளார். 

2000ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்திய அணிக்கு கடும் போட்டியாளராக ஆஸ்திரேலிய அணி திகழ்ந்தது. அத்தகைய காலக்கட்டத்தில் சச்சினுக்கு கடும் நெருக்கடி கொடுப்பவராக திகழ்ந்தவர் மெக்ராத். அதேபோல மிகச்சிறந்த பவுலரான மெக்ராத்தின் பந்தை பதம்பார்த்தவர் சச்சின். 2003ம் ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் முதல் ஓவரிலேயே சச்சினை அவுட்டாக்கியதும் மெக்ராத் தான். 

இவ்வாறு பரஸ்பரம் கடும் போட்டியாளர்களாக விளங்கியவர்கள் சச்சினும் மெக்ராத்தும். இந்நிலையில், ஆங்கில ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த மெக்ராத், சச்சின் குறித்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். 

அந்த பேட்டியில் பேசிய மெக்ராத், 2000ம் ஆண்டில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் எனது பவுலிங்கை சச்சின் அடித்து நொறுக்கினார். நான் போடும் ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆடினார். அப்போது அந்த போட்டியின் இடையே நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில், என்னை லேசாக இடித்து என்னை சீண்டினார் சச்சின். அதற்கு முன்னதாக அப்படி நடந்ததே கிடையாது. எனக்கே சச்சினின் செயல் புதிதாக இருந்தது. அந்த நாள் சச்சினுக்கானது என மெக்ராத் தெரிவித்துள்ளார்.

சச்சின் களத்தில் எதிரணி வீரர்களை சீண்டமாட்டார் என நினைத்த ரசிகர்களுக்கு மெக்ராத் கூறியிருப்பது சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.